நாகைக்கு திட்டச்சேரி வழியாக கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்க வேண்டி இருப்பதால் நாகைக்கு திட்டச்சேரி வழியாக கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்க வேண்டி இருப்பதால் நாகைக்கு திட்டச்சேரி வழியாக கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திட்டச்சேரி, திருமருகல், சியாத்தமங்கை, அண்ணாமண்டபம், குருவாடி, திருப்புகலூர், வவ்வாலடி ஏனங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் நாகையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் அரசு பஸ்களையே நம்பி உள்ளனர். மேலும் இந்த பகுதிகளில் இருந்து ஏராளமான கூலி தொழிலாளர்கள் வேலைக்காக நாகை பகுதிக்கு பஸ்களில் சென்று வருகிறார்கள். இதன் காரணமாக தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது.
படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம்
திருமருகல், திட்டச்சேரி, பனங்குடி ஆகிய இடங்களில் இருந்து நாகை செல்லும் மாணவர்கள் பெரும்பாலும் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிக்கிறார்கள்.
சில நேரங்களில் பஸ்களின் படிக்கட்டுக்கள் உடைந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தற்போது தேர்வுகள் நடைபெற்று வருவதால் உரிய நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வர பஸ் வசதி இல்லாமல் உள்ளது.
மாணவர்கள் கோரிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகள் விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு திட்டச்சேரி வழியாக நாகைக்கு கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நடுக்கடை பகுதியை சேர்ந்த தினேஷ் கூறியதாவது:-
திட்டச்சேரி, திருமருகல் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் நாகை சென்று வருவதற்கு போதிய பஸ் வசதி இல்லை.
இதனால் அன்றாடம் காலதாமதமாக செல்ல வேண்டி உள்ளது. தேர்வுக்கு கூட குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை. எனவே கூடுதலாக பஸ் இயக்க வேண்டும்.
விரைந்து நடவடிக்கை...
தென்பிடாகையை சேர்ந்த சுரேஷ்:-
திட்டச்சேரி, திருமருகல், அண்ணா மண்டபம், திருப்புகலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் நாகை செல்ல வேண்டி உள்ளது. இவர்கள் நாகை சென்று வர ஏதுவாக போதிய பஸ் வசதி இல்லாதது வேதனை அளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கூடுதல் எண்ணிக்கையில் பஸ் இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.