பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள்
ராஜபாளையத்தில் பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சாலையை கடக்க சிரமம்
ராஜபாளையம் பகுதியில் ரெயில்வே பீடர் சாலை, முடங்கியார் சாலை, சத்திரப்பட்டி சாலை ஆகிய பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் அதிக அளவில் உள்ளன.
இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் சாலையில் நடக்க, கடந்து செல்ல மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
ராஜபாளையம் ரெயில்வே பீடர் சாலை பகுதியில் கல்வி நிறுவனங்கள் நிறைய உள்ளன. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் கல்வி பயில வருகின்றனர். இதனால் இந்த சாலையில் எப்போதும் மக்கள், மாணவர்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
கூடுதல் பஸ் வசதி
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, கண்காணிக்க ேபாதுமான போக்குவரத்து போலீசார் இல்லை. ஆதலால் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசாரை கூடுதலாக நியமிக்க வேண்டும். அதேபோல பள்ளி நேரங்களில் போதுமான பஸ்வசதி இல்லாததால் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு மாணவர்கள் பயணம் செய்கின்றனர். எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.