உயர்கல்வி, ஆராய்ச்சிகள் மூலம் கால்நடைகளின் உற்பத்தி திறன் மேம்படுத்தப்படும்-கூடுதல் தலைமைச்செயலாளர் தகவல்


உயர்கல்வி, ஆராய்ச்சிகள் மூலம் கால்நடைகளின் உற்பத்தி திறன் மேம்படுத்தப்படும்-கூடுதல் தலைமைச்செயலாளர் தகவல்
x

உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் கால்நடைகளின் உற்பத்தி திறன் மேம்படுத்தப்படும் என்று கூடுதல் தலைமைச்செயலாளர் ஜவகர் கூறினார்.

சேலம்

தலைவாசல்:

கால்நடை ஆராய்ச்சி பூங்கா

தலைவாசல் அருகே வி.கூட்டு ரோட்டில் ரூ.1,000 கோடியில் கால்நடை பூங்கா மற்றும் கால்நடை ஆராய்ச்சி மைய கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மற்றும் கால்நடை பண்ணை பிரிவுகள், ஆராய்ச்சி வளாகம், திறன் மேம்பாட்டு பிரிவு உள்ளிட்டவைகளின் கட்டமைப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கால்நடை பூங்கா கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கால்நடை பராமரிப்பு துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.ஜவகர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சர்வதேச தரத்தில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் கால்நடைகளின் உற்பத்தி திறன் மேம்படுத்தப்படும். அந்த நோக்கத்தோடு கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் கட்டப்படுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலம் புதிய கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் இருந்து கால்நடை, கோழி மற்றும் மீன் வளர்ப்புத் தொழில்களில் நவீன ஆராய்ச்சி, உயர் கல்வி, தொழில்நுட்ப பரிமாற்றம், தொழில் முனைவோருக்கான பயிற்சி ஆகியவை மேற்கொள்ளப்படும்.

நவீன பண்ணை அமைப்புகள்

மேலும் கால்நடை சார்ந்த தொழில்களின் வளர்ச்சியை மேம்படுத்துவது, நவீன பண்ணை அமைப்புகள் மற்றும் ஆய்வகங்கள் உருவாக்கி பன்னாட்டு ஆராய்ச்சி நிலையங்களுடன் இணைந்து உயர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். கால்நடை இனங்களை பாதுகாத்தல் குறிக்கோள்களை அடைய ஏதுவாக இந்த ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம், மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் ஆணையர் ஞானசேகரன், சேலம் மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி, உதவி கலெக்டர் சரண்யா, ஆவின் பொது மேலாளர் சத்திய நாராயணன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் புருசோத்தமன், சேலம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் இளங்கோ, பால்வளத்துறை துணை பதிவாளர் செந்தில்குமார், ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பிரியதர்ஷினி செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வு

முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் செயலாளர் ஐவகர், கால்நடை பூங்கா பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகளிடம் கூறுகையில், கால்நடை பூங்கா மற்றும் கால்நடை ஆராய்ச்சி மைய பணிகள் 10 சதவீதம் மட்டுமே முடிக்க வேண்டியது உள்ளது. இந்த பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.


Next Story