24 மணி நேர குடிநீர் திட்டத்தை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார். அவர், தண்ணீரின் தரத்தை குடித்து பார்த்து பரிசோதித்தார்.
கோவை
கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார். அவர், தண்ணீரின் தரத்தை குடித்து பார்த்து பரிசோதித்தார்.
கூடுதல் தலைமை செயலாளர்
கோவை மாநகராட்சி 32-வது வார்டு சங்கனூர் நாராயணசாமி நகரில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் பகிர்மான குழாய்கள் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார். அப்போது குடிநீரின் தரத்தை குடித்து பார்த்து பரிசோதனை செய்தார். பின்னர் அவர், சங்கனூரில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை ஆய்வு செய்தார்.
லாலி ரோடு சந்திப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணியை பார்வையிட்டார். மேலும் பணியை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அறிவுறுத்தினார். இது தவிர கட்டுமான மாதிரியை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி தரத்தை பரிசோதனை செய்ய பொறியாளர்களை அறிவுறுத்தினார்.
பாதாள சாக்கடை பணிகள்
இதையடுத்து ஆடீஸ் வீதியில் 80 பேர் அமர்ந்து படிக்கும் வகையில் ரூ.2.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலகம், அறிவு சார் மையம், கோவைப்புதூரில் ரூ.591 கோடியில் நடைபெற்று வரும் குறிச்சி-குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்ட பணிகள், முத்துநகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் கழிவு நீரேற்று நிலையம் ஆகியவற்றை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை ஆணையாளர்கள் ஷர்மிளா, சிவக்குமார், குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்பு பொறியாளர் ராஜி, மாநகர பொறியாளர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பிளாஸ்டிக் டப்பாவில் குடிநீர் பருகினார்
கோவையில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்ய வந்த கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, குழாய்கள் மூலம் வீடுகளுக்கு செல்லும் குடிநீரை குடித்து பார்க்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார். இதை சற்றும் எதிர்பாராத அவர்கள், எந்த பாத்திரத்தில் குடிநீர் கொடுப்பது என்று குழப்பம் அடைந்தனர்.
அப்போது, அங்கு ஒரு பிளாஸ்டிக் டப்பா இருந்தது. இதை பார்த்த சிவ்தாஸ் மீனா, அந்த டப்பாவில் குடிநீர் கொடுங்கள் என்று கேட்டார். அதன்படி அதிகாரிகள் கொடுத்ததும், குடிநீரை குடித்து பார்த்தார். பின்னர் குடிநீர் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். குடிநீரை பிளாஸ்டிக் டப்பாவில் குடித்து பரிசோதித்த அவரது எளிமை, அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட செய்தது.