ரூ.24 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்
கிருஷ்ணகிரி அரசு மகளிர் பள்ளியில் ரூ.24 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மதியழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ணகிரி நகர் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையினை ஏற்று ரூ.24 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தில் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான நவாப் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் பரிதாநவாப் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்று பேசினார்.
இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. பங்கேற்று வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வைத்தார். தொடர்ந்து மீண்டும் மஞ்சப்பை குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் செந்தில்குமார், பாலாஜி, மற்றும் அன்பரசன், கனல் சுப்பிரமணி, ஆனந்தன், சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.