அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்கள் நியமனம் செய்ய வேண்டும்


அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்கள் நியமனம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக டாக்டர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக டாக்டர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீண்ட நேரம் காத்திருப்பு...

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் சீர்காழி பகுதியை சேர்ந்த சீர்காழி நகர், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பூம்புகார், மங்கைமடம், பெருந்தோட்டம், திருப்புங்கூர், கொண்டல், வள்ளுவக்குடி, மாதானம், பழைய பாளையம், மகேந்திரப்பள்ளி, புதுப்பட்டிணம், திருமுல்லைவாசல், புத்தூர், ஆணைக்காரன் சத்திரம், திருமுல்லைவாசல், எடமணல், நல்லூர், குன்னம், காத்திருப்பு, செம்பதனிருப்பு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் புற நோயாளிகளாகவும், 500-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆஸ்பத்திரியில் போதுமான டாக்டர்கள் இல்லை. குறைவான டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பணி புரிவதால் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது.

கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்

இதைப்போல் இந்த ஆஸ்பத்திரியில் மகப்பேறு அறுவை சிகிச்சை டாக்டர், எலும்பு முறிவு டாக்டர், இதய சிகிச்சை டாக்டர் உள்ளிட்ட டாக்டர்கள் போதிய அளவு இல்லாத காரணத்தால், ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளை சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயத்தில் சீர்காழி அரசு ஆஸ்பத்திரி இருந்து வருகிறது.

இதன் காரணமாக சில நோயாளிகள் செல்லும் வழியிலேயே இறந்து விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதே போல் இரவு நேரங்களில் போதிய அளவு டாக்டர்கள் இல்லாத காரணத்தால் அடிக்கடி டாக்டர்களுக்கும், நோயாளிகளின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டவர்களை நியமனம் செய்து சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏழை,எளியோருக்கு வரப்பிரசாதம்

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தாமு இனியவன் கூறுகையில், சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு இந்த ஆஸ்பத்திரி ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆஸ்பத்திரியில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே ஆஸ்பத்திரியில் மகப்பேறு உள்ளிட்ட அறுவை சிகிச்சை டாக்டர்கள் இல்லாத காரணத்தால் நோயாளிகளை வெளியூர்களுக்கு அனுப்புவதை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்து கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். இது ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.


Next Story