அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்


அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்
x

திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகர்மன்ற கூட்டம்

திருத்துறைப்பூண்டி நகர் மன்ற கூட்டம் தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையர் அப்துல்ஹாரிஸ், துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், நகராட்சி நியமன குழு உறுப்பினர் ஆர். எஸ். பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொறியாளர் பிரதான் பாபு, நகராட்சி மேலாளர் சிற்றரசு, நகர் மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் உறுப்பினர் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

குளத்தை தூர்வார வேண்டும்

எழிலரசன்(காங்கிரஸ்):- தேனிகுளம் பிள்ளையார் கோவில் குளத்தை தூர்வாரி மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். மற்றும் சாலை வசதிகள் செய்து தர வேண்டும்.

தாஜூதீன்(சுயேச்சை):- திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் மேட்டு தெருவில் இருந்து ரெயில்வே கேட்டை இணைக்கும் ஆற்றங்கரை பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை வசதி செய்ய வேண்டும்.

ராஜேஸ்வரி(தி.மு.க.):- திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் பயணிகள் நிழலகம் அமைக்க வேண்டும்.

தெரு மின்விளக்கு வசதி

ரமேஷ்குமார்(தி.மு.க.):- நெட்டு ஓடை குளம் தூர்வாரும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். .

சுசீலா(காங்கிரஸ்):- வ.உ.சி. நகர் தெரு பகுதியில் தெரு மின்விளக்கு வசதி, வளையல்கார தெருவில் சாலை வசதி செய்து தர வேண்டும்.

லட்சுமி(இ.கம்யூ):- பெரிய சிங்களாந்தியில் 16 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் உள்ளது. உடனே இந்த பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும்.

மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறை

ஜெயபிரகாஷ்(துணைத் தலைவர்):-. திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் இரவு நேரத்தில் டாக்டர்கள் பணியில் சரிவர இருப்பதில்லை. நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறையாக உள்ளது. எனவே கூடுதல் டாக்டர்களை நியமித்து,போதுமான அளவு மருந்து, மாத்திரைகளை இருப்பு வைக்க வேண்டும்.

கவிதாபாண்டியன்(தலைவர்):-. அரசு ஆஸ்பத்திரியில் குறைபாடுகள் உள்ளதை சரி செய்ய மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவில் நகர் மன்ற உறுப்பினர்களும் இணைக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து பணிகளும் முடிக்கப்படும்

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிக்கு ஒரு நாளைக்கு 25 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதால். மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதை அரசிடம் தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். திருத்துறைப்பூண்டி நகராட்சியில் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பணிகளையும் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.



Next Story