கூடுதல் வருவாய் கிடைக்கும்: பாலருவி எக்ஸ்பிரஸ், மெமு ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
பாலக்காட்டில் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ், மெமு ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும். இதனால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
பாலக்காட்டில் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ், மெமு ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும். இதனால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மெமு ரெயில்
பொள்ளாச்சி-பாலக்காடு வழித்தடத்தில் ஆனைமலை ரோடு ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் வழியாக சென்னை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால் திருச்செந்தூர் ரெயில் மட்டும் தான் இங்கு நின்று செல்கிறது. இதற்கிடையில் பாலக்காடு-செங்கோட்டை இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-பாலக்காடு மெமு ரெயில் நீண்ட மணி நேரம் பாலக்காட்டில் நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே அந்த ரெயில்களை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும். மேலும் அந்த ரெயில்கள் ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆனைமலை ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் பாலக்காடு ரெயில்வே கோட்டம் மற்றும் ரெயில்வே அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பொள்ளாச்சி வரை நீட்டிக்க வலியுறுத்தல்
கடந்த 2009-ம் ஆண்டிற்கு முன் மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருக்கும் போது பாலக்காடு-மதுரை, பாலக்காடு ராமேசுவரம், பாலக்காடு-பொள்ளாச்சி இடையே ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இயக்கப்படும் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டும் தான் ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இதற்கிடையில் பாலக்காடு-செங்கோட்டை இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் பாலக்காட்டிற்கு மதியம் 12 மணிக்கு வருகிறது. பின்னர் அந்த ரெயில் மாலை 4 மணிக்கு தான் மீண்டும் புறப்படுகிறது.
இதேபோன்று எர்ணாகுளம்-பாலக்காடு மெமு ரெயில் பாலக்காட்டிற்கு இரவு 7.25 மணிக்கு வருகிறது. அதன்பிறகு மறுநாள் காலை 8 மணிக்கு தான் எர்ணாகுளம் புறப்படுகிறது. இந்த ரெயில்கள் பல மணி நேரம் பாலக்காட்டில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் ரெயில்வேக்கு எந்த பயனும் இல்லை. எனவே மேற்கண்ட ரெயில்களை பொள்ளாச்சி வரை நீட்டித்தால் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மற்றும் வால்பாறை, டாப்சிலிப், பரம்பிக்குளம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மக்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மூலம் ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். எனவே பாலாருவி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் மெமு ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கவும், அந்த ரெயில்கள் ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.