கூடுதல் நடைமேடை, ரெயில்கள் தேவை:ரெயில்வே துறையின் கவனம் ஈரோடு மீது திரும்புமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு


கூடுதல் நடைமேடை, ரெயில்கள் தேவை:ரெயில்வே துறையின் கவனம் ஈரோடு மீது திரும்புமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 25 April 2023 3:03 AM IST (Updated: 25 April 2023 3:04 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் நடைமேடை, ரெயில்கள் தேவைப்படுகிறது. ரெயில்வே துறையின் கவனம் ஈரோடு மீது திரும்புமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனா்.

ஈரோடு

மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் ரெயில் போக்குவரத்து மிகப்பெரிய பணியாற்றி வருகிறது. மத்திய அரசு ரெயில்வே துறையில் தினசரி மாற்றங்கள் செய்து வருகிறது. ஆனால், தொடர்ச்சியாக ரெயில்வே நிர்வாகத்தால் ஈரோடு மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, ஈங்கூர், கொடுமுடி, ஊஞ்சலூர், சாவடிபாளையம், கொளத்துப்பாளையம், பாசூர் ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் ஈரோடு இந்திய அளவில் பெரிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும். தினசரி 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றன. இங்கு ரெயில்வே மின்சார ரெயில் என்ஜின் பணிமனை, டீசல் ரெயில் என்ஜின் பணிமனை ஆகியவை உள்ளன. ரெயில்களுக்கு தண்ணீர் நிரப்பும் முக்கிய சந்திப்பாகவும் இது உள்ளது. மிகப்பெரிய சரக்கு முனையம் இருக்கிறது. சேலம் கோட்ட ரெயில்வே மருத்துவமனை, ரெயில்வே பணியாளர்களின் குழந்தைகளுக்கான ரெயில்வே பள்ளிக்கூடம் உள்ளது. மிகப்பெரிய அளவில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட ரெயில்வே காலனி இருக்கிறது.

ஆனால் ரெயில்வே நிர்வாகத்தால் ஈரோடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது. ரெயில்வே துறையினர் கவனம் ஈரோடு மீது திரும்புமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

கூடுதல் நடைமேடை

தென்னக ரெயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாஷா:-

ஈரோடு ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு நடை மேடை அமைக்க வேண்டும். ரெயில்வே காலனியில் உள்ள வீடுகள் புதுப்பிக்கப்பட வேண்டும். பழுதடைந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட வேண்டும். ஏற்கனவே இருக்கிற 4 பிளாட்பாரங்களிலும் மேற்கூரைகள் முழுமையாக அமைக்கப்படவில்லை. இதனால் தற்போதைய வெயில் காலம் மற்றும் மழைக்காலத்தில் முதியோர், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு மாலை 6 மணிக்கு மேல் நள்ளிரவு 1 மணி வரை ரெயில்கள் எதுவும் இல்லை. இதுபோல் காலை 7.20 மணிக்கு பின்னர் பகல் 12 மணி வரை கோவையில் இருந்து ஈரோட்டுக்கு ரெயில்கள் எதுவும் இல்லை. திருப்பதி ரெயிலை வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரெயில்வே நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை. அதிக அளவு பயணிகள் ரெயில்கள் இயக்குவதை ரெயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கொடுமுடி ரெயில் நிலையத்தில் ஏற்கனவே நின்று சென்ற 4 ரெயில்கள் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டன. அந்த ரெயில்கள் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரெயில்கள் இழப்பு

வெள்ளோடு பகுதியை சேர்ந்த சி.கிங்ஸ்:-

ஈரோடு-நெல்லை பயணிகள் ரெயில், ஈரோடு-திருச்சி, ஈரோடு-பாலக்காடு, ஈரோடு-மேட்டூர் பயணிகள் ரெயில்கள் தவிர குறிப்பிடத்தக்க ரெயில்கள் எதுவும் இங்கிருந்து இயக்கப்படவில்லை. கோவை, சென்னை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் ஈரோடு வழியாக செல்கின்றன. ஆனால் ஈரோட்டில் இருந்து வட மாநிலங்களுக்கோ, தென் மாவட்டங்களுக்கோ புறப்படும் ரெயில்கள் இல்லை என்பது வேதனையாக உள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் ஈரோடு மாவட்டத்தில் வசித்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் ஈரோட்டில் இருந்து தங்கள் ஊர்களுக்கு செல்ல போதிய வசதிகள் இல்லை என்றே கூற வேண்டும். அனைவரின் பயண தேவையாக ரெயில்கள் தான் உள்ளன. கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், கோவை-நாகர்கோவில் பயணிகள் ரெயில், ஈரோடு-நெல்லை பயணிகள் ரெயில், மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் என்று 4 ரெயில்கள் ஈரோடு வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்கின்றன. இதில் ஈரோட்டில் இருந்து புறப்படும் நெல்லை பயணிகள் ரெயில் மதியம் 12.55 மணிக்கு புறப்படுகிறது. இதனால் தொழில் செய்பவர்கள், வேலைகளுக்கு செல்பவர்கள் இந்த ரெயிலில் பயணம் செய்ய முடியாத நிலை இருக்கிறது.

கோவை-நாகர்கோவில் ரெயில் கோவை, திருப்பூரிலேயே பயணிகள் நிறைந்து குறைந்த பட்ச இருக்கைகளுடன் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வரும். அதுவும் பகல் நேர ரெயில் என்பதால் தொழில், பணிக்கு செல்பவர்கள் ஒரு நாள் வீணாகி விடும் என்று அதிகம் விரும்பவில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் பயணம் செய்து வருகிறார்கள்.

மைசூரு-தூத்துக்குடி ரெயில் அதிகாலை 3 மணிக்கு மேல் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும். வாரத்தில் 4 நாட்கள் ஈரோடு வழியாக சென்று வந்த மும்பை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாமக்கல் வழியாக திருப்பிவிடப்பட்டதால் ஈரோடு பயணிகள் இந்த ரெயில்களையும் இழந்து உள்ளனர்.

செங்கோட்டை ரெயில்

ஈரோட்டை சேர்ந்த ஜி.கமலஹாசன்:-

தென் மாவட்ட மக்களுக்கு ஈரோட்டில் இருந்து செல்லும் ரெயில்களில் வசதியான ரெயிலாக கருதப்படுவது கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில். தூத்துக்குடி இணைப்பு ரெயிலாக இயக்கப்பட்டு வந்த இந்த ரெயில் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் ரெயில் வசதி இல்லாமல் திண்டாடுகிறார்கள். இந்த ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். தூத்துக்குடி ரெயில் இணைப்பானது மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்.

ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு ரெயில் விடப்படும் என்று சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு செய்யப்பட்டும் இன்னும் ஒரு ரெயில் விடப்படவில்லை. ஈரோடு-செங்கோட்டை ரெயில் விடப்பட்டால் தென்காசி மாவட்ட மக்கள் சிரமமின்றி செல்ல வாய்ப்பு அமையும். இதுபோல் ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் நேரடியாக திருச்செந்தூர் செல்ல ரெயில் வசதி எதுவும் இல்லை. இந்த சூழலில் பயண நேரத்தை குறைக்கும் வந்தே பாரத் ரெயில் ஈரோடு வழியாக கன்னியாகுமரி வரை இயக்கினால் தென் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

1 More update

Next Story