சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.40 லட்சம் கூடுதல் வருவாய்


சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.40 லட்சம் கூடுதல் வருவாய்
x

ஆடிக்கிருத்திகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.40 லட்சம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பத்தூர்

சிறப்பு பஸ்கள்

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து சென்றனர்.

அவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் வேலூரில் இருந்து 60 பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 30 பஸ்களும், சோளிங்கரில் இருந்து 10 பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 35 பஸ்கள் உள்பட மொத்தம் 185 பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த பஸ்கள் கடந்த 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை 3 நாட்கள் இயக்கப்பட்டது. இந்த பஸ்களால் பக்தர்கள் சிரமமின்றி கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக விசாரணை மையமும் அமைக்கப்பட்டிருந்தது. இதுதவிர ஆடிக்கிருத்திகை அன்று வேலூரை அடுத்துள்ள ரத்தினகிரி, வள்ளிமலை, கைலாசகிரி, ஜலகம்பாறை, முத்துக்குமரன்மலை, பாலமதி ஆகிய ஊர்களில் உள்ள முருகன் கோவில்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

இந்த சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.40 லட்சம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுதல் வருமானம்

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

வேலூர் போக்குவரத்து மண்டலம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சாதாரண நாட்களில் ஒரு நாளைக்கு ரூ.68 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதன் மூலம் ஒருநாளைக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது. இதன் மூலம் 3 நாட்களில் ரூ.40 லட்சம் வரை கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story