அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாகர்கோவில் பயணிகளுக்கு கூடுதல் இருக்கை ஒதுக்கீடு
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ெரயிலில் டவுன் ரெயில் நிலையம் முன்பதிவில் பொதுபட்டியலில் இணைக்கப்படுவதால் அந்த ரெயிலில் நாகர்கோவில் பயணிகளுக்கு கூடுதல் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நாகர்கோவில்,
சென்னையில் இருந்து நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக கேரள மாநிலம் கொல்லத்துக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு செல்வதால் நேரம் வீணாகி வந்தது. எனவே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்க ரெயில்வே வாரியத்தால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதோடு அக்டோபர் 20-ந் தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும் என்று திருவனந்தபுரம் கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை டவுன் வழியாக இயக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பதிவு கோட்டா தனி ஒதுக்கீட்டில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 100-ல் இருந்து 150 இருக்கைகள் கூடுதலாக டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து பயணம் செய்யும் பயணிகளுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
தற்போதுள்ள முன்பதிவு கோட்டாவில் கொல்லம் முதல் இரணியல் வரை பொது ஒதுக்கீடாகவும், நாகர்கோவில் சந்திப்பு முதல் திருநெல்வேலி வரை உள்ள ரெயில் நிலையங்கள் தனி ஒதுக்கீடாகவும் இருந்து வருகிறது. இதனால் நாகர்கோவில் சந்திப்பில் இருந்து பயணம் செய்யும் பயணிகளுக்கு குறைந்த அளவே இருக்கைகள் கிடைத்து வருகின்றன.
இந்த நிலையில் அக்டோபர் 20-ந் தேதிக்கு பிறகு நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையமும் பொது பிரிவின் கீழ் இணைக்கப்பட்டு இருப்பதால் டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த தகவலை குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.