தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு எதிரொலி: 129 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறந்ததன் எதிரொலியாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129 அடியாக குறைந்தது
தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழைப்பொழிவு இல்லை. இதனால் அணைக்கு நீர் வரத்து குறைந்ததுடன் நீர்மட்டமும் குறையத்தொடங்கியது. மேலும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் மேலும் குறையத்தொடங்கி உள்ளது. இந்நிலையில் இன்று அணையின் நீர்மட்டம் 129.10 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 484 கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதற்கிடையே லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் 126 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.