ஆவின் வெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க போதிய நடவடிக்கை - அதிகாரி தகவல்


ஆவின் வெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க போதிய நடவடிக்கை - அதிகாரி தகவல்
x

ஆவின் வெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஆவின் நிறுவனம் வாயிலாக பால் மட்டுமின்றி, 225-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் மோர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், நெய், இனிப்பு வகைகள் ஆகியவற்றை எல்லா தரப்பினரும் விரும்புகின்றனர்.

இந்த நிலையில், ஆவினில் வெண்ணெய், பால் பவுடர், நெய் உள்ளிட்ட உபபொருட்கள் தயாரிப்பு குறைந்துள்ளது. வெளி மாநிலங்களிலும் பால் பற்றாக்குறை நிலவுவதால், அங்கும் வெண்ணெய் தயாரிப்பு குறைந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் விற்பனை இணையதளம் வாயிலாக வெளிமாநிலங்களில் இருந்து வெண்ணெய் கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஆவின் நிறுவனத்துக்கு தினமும் 5 முதல் 6 டன் வெண்ணெய் தேவைப்படும். தற்போது, தேவையான வெண்ணெய், பால் பவுடர் மட்டுமே உள்ளது. தேவைக்கு அதிகமாக இல்லை. எனவே, வெண்ணெய், பால் பவுடர் ஆகியவற்றை எதிர்கால இருப்பு வைக்க முடியவில்லை.

நாடு முழுவதும் பால் உற்பத்தி குறைந்துள்ளது. தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்போது, பிரச்சினை சரியாகிவிடும். ஆவின் வெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெண்ணெய் தேவை அதிகரித்தால், வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story