நீண்டதூர ரெயில்களில் போதுமான வசதி செய்து தரப்படுகிறதா?
நீண்டதூர ரெயில்களில் போதுமான வசதி செய்து தரப்படுகிறதா? இதுகுறித்து நாமக்கல் பயணிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
நாமக்கல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நாமக்கல் வழியாக சேலம் - கரூர் அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு இந்த ரெயில் பாதை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இந்த ரெயில் பாதையில் சேலம் கோட்டம் போதிய ரெயில்களை இயக்குவதில்லை.
தற்போது நாமக்கல் வழியாக சென்னை - பாலக்காடு, பெங்களூரு- நாகர்கோவில் ஆகிய 2 தினசரி ரெயில்கள், சேலம் - கரூர் - சேலம் என 2 ஜோடி பயணிகள் ரெயில், தாதர்-திருநெல்வேலி, காச்சிகுடா - நாகர்கோவில், நாகர்கோவில் - மும்பை, திருச்சி - ஸ்ரீ கங்கா நகர், சென்னை- நாகர்கோவில் ஆகிய 5 வாராந்திர ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இந்த பாதையில் மிகவும் குறைவான ரெயில்களே இயக்கப்படுவதால், பயணிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக இல்லை. எனவே கூடுதல் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் நாமக்கல் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது. பயணிகளுக்கு ரெயில்களிலும், பிளாட்பாரங்களிலும் போதிய வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்து தந்து உள்ளதா? அவை போதுமானதாக இருக்கிறதா? என்பது குறித்து பயணிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர்.
நாமக்கல்லில் நிற்பது இல்லை
இது குறித்து நாமக்கல் மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தின் செயலாளர் கார்த்திக் சென்னிமலை கூறியதாவது:-
நாமக்கல் வழியாக இயக்கப்படும் ரெயில்கள் ராசிபுரம், நாமக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்பது இல்லை. குறிப்பாக நாமக்கல் மாவட்ட மக்கள் சென்னை செல்ல பாலக்காடு - சென்னை என்ற ஒரு ரெயிலை மட்டுமே நம்பி உள்ளனர். இது கேரளாவில் இருந்து வருவதால் நாமக்கல் ரெயில் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பது இல்லை. இது ஒரு புறம் இருக்க சென்னையில் இருந்து மதுரைக்கு வாராந்திர (வாரத்திற்கு மூன்று முறை) ரெயில் நாமக்கல் வழியாக இயக்கப்படுகிறது. இருப்பினும் இந்த ரெயில் நாமக்கல்லில் நிற்பது இல்லை. அதேபோல் கொரோனா காலத்திற்கு முன்பு வரை நாமக்கல்லில் நின்று சென்ற மும்பை - நாகர்கோவில் ரெயில் தற்போது நாமக்கல்லில் நிற்பது இல்லை.
மேலும் அடுத்த வாரம் முதல் கர்நாடக மாநிலம் ஹூப்ளி முதல் தஞ்சாவூர் வரை வாராந்திர சிறப்பு ரெயில் தென் மேற்கு ரெயில்வே இயக்க உள்ளது. இந்த வாராந்திர ரெயில் ஹூப்ளியில் இருந்து ஹரிஹர், தாவண்கரே, பெங்களூரு, பங்காருபேட், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக இயங்க உள்ளது. இந்த சிறப்பு ரெயிலுக்கு நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு மட்டும் நிறுத்தம் வழங்கப்படவில்லை. இந்த நிலை நீடித்தால் வரும் காலங்களில் நாமக்கல் ரெயில் நிலையத்தை அனைத்து ரெயில்களும் படிப்படியாக புறக்கணித்து நாமக்கல் ரெயில் நிலையம் மூடும் நிலைமைக்கு தள்ளப்படும்.
தண்ணீர் வசதி
தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர் எஸ்.கே.வேல்:-
ரெயில்களில் முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் 'அப்பர் பெர்த்' என்று அழைக்கப்படும் உயரத்தில் உள்ள படுக்கைகளை ஒதுக்குகின்றனர். மனித நேயம் குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் படுக்கைகளை மாற்றித்தர விரும்பாத சில பயணிகளால் முழுக் கட்டணத்தையும் செலுத்திய முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உயரத்தில் உள்ள படுக்கைகளில் ஏற முடியாமல் இரவு முழுவதும் தரையில் அமர்ந்து பயணம் செய்யும் அவல நிலை தொடர்கிறது. இதனை மாற்றி முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு லோயர் பெர்த் அளிக்க ரெயில்வே நிர்வாகம் முன்வரவேண்டும்.
தற்போது கோடைக்காலம் என்பதால் அனைத்து ரெயில்களிலும் தண்ணீர் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்தம், பாதுகாப்பு, நேரம் தவறாமை ஆகிய மூன்று தான் ரெயில்வேயின் தாரக மந்திரம். ஆனால் இந்த தாரக மந்திரத்தால் பயணிகள் பலனடைய ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் ரெயில் நிலையத்தை பொறுத்த வரையில் அங்கு சென்று வர பஸ் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும்.
நாமக்கல் - அரியலூர் ரெயில்வே திட்டம்
நாமக்கல்லை சேர்ந்த ரெயில் பயணி சுகந்தன் ராஜூ:-
கடந்த 2018-2019-ம் ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் அரியலூரில் இருந்து பெரம்பலூர், துறையூர் வழியாக நாமக்கல் வரை 108 கி.மீ. தூரத்துக்கு ரெயில்வே பாதை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பின் இத்திட்டத்திற்காக நில அளவை பணிகளுக்காக மத்திய அரசு ரூ.16.5 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இப்பணிகள் முடிந்து கடந்த 2021-ம் ஆண்டு ரெயில்வே வாரியத்திடம் இத்திட்டத்திற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பிறகு இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. நாமக்கல் - அரியலூர் புதிய ரெயில் பாதை திட்டமானது அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் வளர்ச்சி பெரும். மேலும் நாமக்கல் ரெயில் நிலையம் சந்திப்பு தரம் உயரும். நாமக்கல் வழியாக கூடுதலாக ரெயில்களை இயக்க முடியும்.
எனவே 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள நாமக்கல் - அரியலூர் ரெயில்வே திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சுதந்திரமடைந்து இந்நாள் வரை பெரம்பலூர் பகுதியில் ரெயில்வே வழித்தடம் இல்லாத நிலையில் நாமக்கல் - துறையூர் - பெரம்பலூர் - அரியலூர் ஆகிய நகரங்களை இணைக்கும் ரெயில் பாதை அமைக்க இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து புதிய ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரமான உணவு
திருச்செங்கோட்டை சேர்ந்த தமிழரசன்:-
நீண்ட தூர ரெயில்களில் உள்ள கழிவறைகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு என்பது தொடர்கதையாக இருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். அதேபோல் இரவு 9 மணிக்கு மேல் சில பயணிகள் விளக்குகளைப் போட்டுக் கொண்டு குடும்பச் சண்டைகளை போடுவதால் பிற பயணிகளுக்கு தூங்க முடியாத அவல நிலை ஏற்படுகிறது.
இதனைத் தட்டிக் கேட்டால் சில நேரங்களில் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனை தீர்த்து வைக்க போலீசாரும், டிக்கெட் பரிசோதகரும் முன்வருவதில்லை. ஓடும் ரெயிலில் பயணிகள் பிரச்சினையை தீர்க்க அவசர உதவி எண்களை ரெயில் பெட்டிகளில் பயணிகளின் கண்களில் படும்படியாக விளம்பரப்படுத்துவதுடன், புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். அனைத்து ரெயில்களிலும் தரமான உணவு கிடைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.