மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்


மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
x

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு முன்கூட்டியே எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது, இதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினையும் பாராட்டுகிறது.

எனினும், மாண்டஸ் புயலினால் 5-க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கியும், மழையினாலும் உயிரிழந்துள்ளனர். கால்நடைகள் உயிரிழந்துள்ளன. கனமழையினால் வீடுகள் மற்றும் குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீனவர்களின் படகுகள், வலைகள் சேதமடைந்துள்ளன. வேதாரண்யத்தில் கடல்நீர் உட்புகுந்து உப்பளங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை உள்ளிட்ட பல இடங்களில் வாழை மரங்கள் முறிந்துள்ளன. பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன. இதனால் மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே, மாண்டஸ் புயல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கும், வீடுகள், உடமைகளை இழந்த மக்களுக்கும், மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையினை வழங்கிட வேண்டும் எனவும், கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story