பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டம் மூலம் உரிய நிவாரணம் -எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளை நீக்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை காப்பீட்டுத்திட்டம் மூலம் பெற்றுத்தர வேண்டும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் கடந்த ஆண்டு பெய்த மழையினால் நெற்பயிர்கள் பெருமளவு பாதிப்படைந்தன. இதுகுறித்து வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்று சென்ற ஆண்டு நான் தி.மு.க. அரசை பலமுறை வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால், சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. அரசு 2021-2022-ம் ஆண்டுக்கு, பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு ரூ.480 கோடியை பெற்று தந்ததாக விளம்பரப்படுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை துவக்கியது. அதன்படி பாதிக்கப்பட்ட பெரும்பாலான விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு குறைந்தபட்சமாக வெறும் ரூ.250 மட்டுமே வழங்கப்பட்டதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். மேலும் பல கிராமங்களுக்கு காப்பீட்டு நிவாரணம் பெற்றுத்தரப்படாமல் ஏமாற்றப்பட்டு உள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.
மழையே பெய்யவில்லையா?
அரசு நேரில் சென்று பாதிப்புகளை கணக்கெடுக்காததன் விளைவு, இன்றைக்கு விவசாயிகள் நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் செலுத்திய பயிர் காப்பீட்டு பிரீமியம் தொகையை கூட பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு பெற்றுத்தரவில்லை என்பது வேதனைக்குரியதாகும். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏக்கர் ஒன்றுக்கு பெற்றுத்தந்த குறைந்தபட்ச நிவாரணமான ரூ.7 ஆயிரம் எங்கே?. தி.மு.க. அரசு பெற்று த்தந்த ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.250 எங்கே?. தி.மு.க. அரசின் நிர்வாக குளறுபடிகள் காரணமாக தமிழக விவசாயிகள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதற்கு இந்த ஒரு நிகழ்வே எடுத்துக்காட்டாகும்.
மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த பயிர் காப்பீட்டு நிவாரண தொகையை கூட தி.மு.க. அரசு பெற்றுத்தரவில்லை. தஞ்சை மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டின் மூலம் பெற்ற இழப்பீட்டுத்தொகை வெறும் ரூ.36 லட்சம் மட்டுமே. அப்படியானால், தஞ்சையில் மழையே பெய்யவில்லையா?, பயிர்கள் சேதம் அடையவில்லையா?.
உரிய நிவாரணம்
எனவே, கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளை நீக்கி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருவர்கூட விடுபடாமல், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை காப்பீட்டுத்திட்டம் மூலம் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.