போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து இனி வரும் காலங்களில் வெடி விபத்தே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் - ராமதாஸ்


போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து இனி வரும் காலங்களில் வெடி விபத்தே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் - ராமதாஸ்
x

கோப்புப்படம்

போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து இனி வரும் காலங்களில் வெடி விபத்தே இல்லை என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பட்டாசு மற்றும் வெடி ஆலைகளிலும், அவை பாதுகாத்து வைக்கப்படும் கிடங்குகளிலும் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து இனி வரும் காலங்களில் வெடி விபத்தே இல்லை என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியில் உள்ள நாட்டு வெடி கிடங்கில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியாற்றி வந்த நால்வர் உயிரிழந்தனர்; 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த ஐவருக்கும் தரமான மருத்துவம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் விரைவில் நலமடைந்து வீடு திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் தான் பட்டாசு விபத்துகள் ஏற்படும் என்ற நிலை மாறி, எல்லா மாவட்டங்களிலும் இப்போது வெடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் பட்டாசு மற்றும் வெடி ஆலைகளிலும், அவை பாதுகாத்து வைக்கப்படும் கிடங்குகளிலும் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாதது தான். இந்தக் குறைகளை சரி செய்து இனி வரும் காலங்களில் வெடி விபத்தே இல்லை என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story