இலவச வீட்டுமனைப்பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு
இலவச வீட்டுமனைப்பட்டா வழங்காமல் இழுத்தடிப்பதாக கூறி ரேஷன் கார்டு, ஆதார் கார்ைட ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இலவச வீட்டுமனைப்பட்டா வழங்காமல் இழுத்தடிப்பதாக கூறி ரேஷன் கார்டு, ஆதார் கார்ைட ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இலவச வீட்டுமனைப்பட்டா
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் பல்லடம் தாலுகா இச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுக்க திரண்டு வந்தனர். அவர்கள் தங்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்தனர்.
தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்காமல் இழுத்தடித்து வருவதாக புகார் கூறினார்கள். பின்னர் முக்கிய நிர்வாகிகளை மட்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க அனுமதித்தனர். அதன்படி அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கொட்டி முத்துப்பாளையம் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் வண்டிப்பாதை புறம்போக்கு என இருந்ததை வகைமாற்றம் செய்து வீடற்ற மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு முதல் கோரிக்கை வைத்தோம். அப்போதைய தி.மு.க. ஆட்சியின்போது நிலத்தை வகைமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உண்ணாவிரதம்
அதன்பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் மனு கொடுத்தோம். தற்போது அந்த பகுதியில் மரக்கன்றுகள் நட்டு அதை அழித்து பட்டா வழங்க முடியாது என்பதைப்போல் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 99 பேருக்கு பட்டா வழங்குதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்த நிலையில் தற்போது வேண்டும் என்றே தனி நபர் மூலமாக வழக்கு தொடுத்து அதை காரணம் காட்டி பட்டா கொடுக்காமல் உள்ளனர். 12 ஆண்டுகளாக வீட்டுமனைப்பட்டா கேட்டு போராடி வருகிறோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் வருகிற 10-ந் தேதி பொதுமக்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருப்போம்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.