விவசாய நிலம் வாங்க ஆதிதிராவிடர்-பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்


விவசாய நிலம் வாங்க ஆதிதிராவிடர்-பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்
x

விவசாய நிலம் வாங்க ஆதிதிராவிடர்-பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலை மேன்மையடைய, அவர்கள் சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி இந்த ஆண்டு 200 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த விவசாய தொழில் செய்பவர்களில் நில உடமைகளை அதிகரிக்கும் பொருட்டும், பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையிலும் சொந்தமாக விவசாய நிலம் வாங்கி விவசாயத்தில் வருவாய் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நிலம் வாங்க உத்தேசித்துள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம். மேலும் நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் ஒரு பயனாளிக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய தாட்கோ இணையதளமான http://application.tahdco.com., http://fast.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், தாட்கோவில் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் நிலம் வாங்குதல், நிலம் மேம்படுத்துதல் மற்றும் துரிதமின் இணைப்பு திட்டம் ஆகிய விவசாயம் சார்ந்த திட்டங்களுக்கு மானியம் பெற்று பயனடைந்த பயனாளிகள், தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமை செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் "ஒருதுளி அதிகப்பயிர்" திட்டத்திலும் பயனடையலாம். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு விவசாயிகள் மற்றும் விண்ணப்பதாரர்கள் தோட்டக்கலைதுறையை அணுகுமாறு தாட்கோ மேலாண்மை இயக்குனரால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story