ஆவின் பாலகம் அமைக்க கடனுதவி பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்
ஆவின் பாலகம் அமைக்க கடனுதவி பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலமாக புதிய தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்திடும் வகையில் உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்களை கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராகவும், 18 வயது முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் பெறாதவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிட தனிநபர்களுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். பழங்குடியினர் தனி நபர்களுக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு ஆதிதிராவிடர் http://application.tahdco.com மற்றும் பழங்குடியினர் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரி, மாவட்ட மேலாளர் அலுவலகம் தாட்கோ, மாவட்ட கலெக்டர்அலுவலகம், கள்ளக்குறிச்சி (606213) என்ற முகவரி அல்லது (04151-225411) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.