சேலத்தில் ஆடித்திருவிழா: கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி-பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
சேலத்தில் ஆடித்திருவிழாவையொட்டி கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சாட்டுதல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
பூச்சாட்டுதல் விழா
சேலம் மாவட்டத்தில் ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழா களை கட்டுவது வழக்கம். சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். கோட்டை மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு ஆடித்திருவிழா கடந்த 17-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது.
தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று இரவு கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் விழா நடந்தது. மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
ஊர்வலம்
சோழ வேளாளர் சமூகம் டிரஸ்ட் தலைவர் சண்முகம் தலைமையில் பூக்கூடை ஊர்வலம் நடந்தது. கிச்சிப்பாளையம் கந்தசாமி தெருவில் உள்ள பஜனை மடம் வீதியில் தொடங்கிய ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் திருநாவுக்கரசர் தெரு, சின்ன மாரியம்மன் கோவில் தெரு, சன்னியாசிக்குண்டு மெயின்ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோட்டை மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.
பின்னர் மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பக்தர்கள் பலர் தாங்கள் கொண்டு வந்த பூக்களை அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். ஊர்வலத்தில் சோழ வேளாளர் சமூகம் டிரஸ்ட் செயலாளர் தமிழரசன், துணை செயலாளர் ஆனந்தன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொங்கல் வழிபாடு
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சாட்டுதல் உற்சவத்தை தொடர்ந்து சேலம் குகை மாரியம்மன்-காளியம்மன் கோவில், தாதகாப்பட்டி கேட் சஞ்சீவராயன்பேட்டை மாரியம்மன்-காளியம்மன், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், சின்னக்கடை வீதி சின்னமாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன் உள்பட 8 பேட்டை மாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கியது.
கோட்டை மாரியம்மன் கோவிலில் அடுத்த மாதம் 7-ந் தேதி சக்தி அழைப்பு நிகழ்ச்சியும், 9, 10 மற்றும் 11-ந் தேதியில் பொங்கல் வழிபாடு, மாவிளக்கு பிரார்த்தனை செலுத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.15-ந் தேதி பால்குட ஊர்வலம், மகா அபிஷேகம், அதனை தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.