கரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்


கரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்
x

கரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடந்தது. இதையடுத்து காவிரி குவிந்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கரூர்

ஆடிப்பெருக்கு

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இதில் ஆடி 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த விழாவானது காவிரித்தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் காவிரி கரையோரங்களில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் ஒகேனக்கல் முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் கரூர் அருகே உள்ள நெரூர் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி நெரூர் காவிரி ஆற்றிற்கு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் அதிகளவில் வந்தனர். பின்னர் பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் புனித நீராடினர்.

பூஜை

தொடர்ந்து காவிரி ஆற்று கரையில் பக்தர்கள் வாழை இலை விரித்து படையலிட்டனர். அதில் தேங்காய், வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, முளைப்பாரி உள்ளிட்ட பொருட்களை வைத்தும், மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு உள்ளிட்ட பொருட்களை வைத்தும் படையலுக்கு கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர். அப்போது குடும்பத்தினர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

தீபாராதனையை படையலுக்கு காண்பித்த பின் ஆற்றை நோக்கி காவிரித்தாய்க்கும், சூரிய பகவானுக்கும் காண்பித்தனர். மஞ்சள் கயிற்றை பூஜைக்கு பின் பெண்கள் கழுத்தில் கட்டி விட்டனர். குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு கையில் மஞ்சள் கயிறு கட்டி விட்டனர். பின்னர் முளைப்பாரிகளை ஆற்றில் விட்டு சென்றனர். இதேபோல் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கரூர் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் பக்தர்கள் பூஜை செய்து முளைப்பாரியை ஆற்றில் விட்டனர்.

குளித்தலை

குளித்தலையில் உள்ள பிரசித்தி பெற்ற கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரை பகுதிக்கு நேற்று அதிகாலை முதலே புதுமண தம்பதிகள், பெண்கள் தங்கள் கணவருடன் வந்திருந்தனர். அவர்கள் விநாயகரை வழிபடும் வகையில் மணலால் பிள்ளையார் பிடித்து வைத்தனர். பின்னர் வாழையிலையை விரித்து அதில் பூஜை பொருட்களை வைத்து வழிபாடு நடத்தினர். பூஜை முடிந்த பிறகு அனைத்து பெண்களும் தங்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். புதுமணத்தம்பதியர் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். காவிரி ஆற்றால் வளம் செழிக்கவேண்டுமென விவசாயிகள் காவிரியை வணங்கி வழிபட்டனர். சிலர் முளைப்பாரி எடுத்துவந்து காவிரிக்கரையில் வைத்து பூஜைகள் செய்து ஆற்றில் விட்டு வழிபட்டனர்.

நொய்யல்

நொய்யல், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவிரி கரையோரம் ஆடிப்பெருக்கு விழா மிக விமர்சையாக நடைபெற்றது. நேற்று காலை பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் முளைப்பாரியை கொண்டு வந்து காவிரி ஆற்றங்கரையில் வைத்துவிட்டு புனித நீராடினர். பின்னர் காவிரி கரையோரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மஞ்சள் நூலை பெரியவர்களும், குழந்தைகளும் வலது கையில் கட்டிக் கொண்டனர். தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு பல்வேறு வாகனங்களில் வந்து குளித்து பிள்ளையாரை வழிபட்டனர். புதுமணத் தம்பதிகள் காவிரி ஆற்றுக்கு வந்து புனித நீராடி தாலிக்கயிற்றை பிரித்து கட்டிக் கொண்டனர்.

லாலாபேட்டை

மாயனூர் காவிரி ஆற்றங்கரையில் அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். முதலில் காவிரியில் புனித நீராடினர். பெண்கள், புதுமண தம்பதிகள் தலைவாழை இலை போட்டு அதில் பச்சரிசி, பழங்கள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் முளைப்பாரிகளை காவிரியில் விட்டனர். புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை காவிரிஆற்றில் விட்டு வணங்கினர். பின்னர் காவிரி கரையோரம் அமைந்துள்ள செல்லாண்டியம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல் கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், லாலாபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றங்கரைகளிலும் பக்தர்கள் கூடி காவிரி தாயை வழிபட்டனர்.


Next Story