திருவாரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்


திருவாரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்
x

திருவாரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீர்நிலைகளில் படையலிட்டும், கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டியும் பெண்கள் வழிபட்டனர்.

ஆடிப்பெருக்கு விழா

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் திகழ்ந்து வருகிறது. இதில் திருவாரூர் மாவட்டம் உணவு உற்பத்தியில் முதன்மையாக விளங்குகிறது. உணவு உற்பத்திக்கு உறுதுணையாக இருந்து வரும் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். விழாவை தங்கள் குடும்பத்துடன் ஆறுகளுக்கு வந்து கரைகளில் பெண்கள் படையலிட்டு வணங்கி மகிழ்ந்து வந்தனர்.

இந்த ஆண்டு மே மாதம் 24-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் அனைத்து ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் கரைபுரண்டு ஒடுகிறது. இதனால் ஆறு, வாய்க்காலில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் குளம், நீர் நிலைகள், மோட்டார் பம்பு செட்டுகள் ஆகிய இடங்களில் பெண்கள் படையிலிட்டு வணங்கினர். இதேபோல் வீடுகளில் அடி பைப்புகள், தண்ணீர் குழாய்களில் மாலை அணிவித்து பெண்கள் வழிபட்டனர்.

பெண்கள் கூட்டம் அலைேமாதியது

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திருவாரூர் கமலாலய குளம், ஒடம்போக்கியாற்றின் கரைகளில் காலை முதலே பெண்கள் கூட்டம் அலைமோதியது. படிக்கட்டுகளில் மஞ்சளில் பிள்ளையார் உருவம் செய்து வைத்து காதோலை கருகமணியுடன் பேரிக்காய், வாழைப்பழம், வெல்லம் கலந்த அரிசி ஆகியவற்றை படையலிட்டு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

பின்னர் பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் பகுதியில் நேற்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. அதன்படி மூணாறுதலைப்பு, வெண்ணாறு, கோரையாறு, பாமனியாறு ஆகிய ஆறுகளின் படித்துறைகளில் ஏராளமான பெண்கள் புனித நீராடி புத்தாடைகள் அணிந்து தங்கள் குடும்பத்தினருடன் பூஜைகள் செய்து காவிரித்தாயை வணங்கினர். தொடர்ந்து ஆற்றங்கரைகளில் உள்ள விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் பெண்கள் வழிபாடு நடத்தினர். உழவர்களுக்கும் உகந்த நாள் ஆடி 18 என்பதால் விவசாயிகள் உழவுத்தொழிலை மேற்கொண்டார்.

மன்னார்குடி

இதேபோல் மன்னார்குடி பாமணி நதிக்கரையில் புதுபாலம், மேலப்பாலம், மன்னை நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான பெண்கள் படையலிட்டு வழிபாடு செய்தனர். அகில பாரத சன்னியாசிகள் சங்கத்தின் சார்பில் மன்னார்குடி பாமணி நதிக்கு மகா ஆரத்தி வைபவம் நடைபெற்றது. இதில் ஐவர் சமாது சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி மடத்தின் சிவனடியார்கள் கைலாசநாதர் கோவில் அருகில் பாமணி நதிக்கு மகா ஆரத்தி எடுத்து அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, கோரையாறு, வடபாதிமங்கலம், பழையனூர், நாகங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது. இதில் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள வெண்ணாறு, கோரையாறு, வெள்ளையாறு கரையோரங்களில் ஏராளமான பெண்கள் பழ வகைகள், மஞ்சள் கயிறு, அரிசி வைத்து, காமாட்சி விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் கும்மி பாட்டு பாடி, நடனம் ஆடினர். தொடர்ந்து பெண்கள் ஒருவருக்கொருவர் கழுத்திலும், கையிலும் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். இதேபோல் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story