ஆடிப்பெருக்கு விழா: பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள்- புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு


ஆடிப்பெருக்கு விழா: பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள்- புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு
x

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர். மேலும் புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ஈரோடு

பவானி

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர். மேலும் புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ஆடிப்பெருக்கு விழா

தமிழர் விழாக்களில் ஆடிப்பெருக்கு விழாவுக்கு தனி சிறப்பு உண்டு. காவிரி பாயும் பகுதிகள் தோறும் இந்த ஆடிப்பெருக்கு விழா காவிரிக்கரையில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். விவசாயிகள் நடவு பணியினை தொடங்கும் காலத்தில் வரும் ஆடிப்பெருக்கின்போது, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். எனவே மண்ணுக்கு வளம் தரும் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாய குடும்பத்தினர் விதை நெல், தானியங்களை வைத்து முளைப்பாரி எடுத்து அதனை காவிரிக்கரைக்கு கொண்டு வந்து பூஜை செய்து சூரிய கடவுளுக்கும், காவிரி தாய்க்கும் பூஜை செய்து நன்றி தெரிவிப்பது வழக்கம்.

இதுபோல் ஆடி முதல் நாளில் பிரியும் புதுமண தம்பதியினர் மீண்டும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் நாளாக ஆடிப்பெருக்கு உள்ளது. இதற்காக காவிரிக்கரையில் உள்ள கோவில்களில் சந்தித்து பூஜை செய்து, திருமணத்தின் போது அணிந்திருந்த பூமாலைகளை ஆற்றில் விட்டு, தாலி பிரித்து கட்டி, சாமியை வழிபட்டு ஆசி பெறுவது ஒரு சடங்காக உள்ளது.

குடும்பத்தில் இறந்து போன கன்னிப்பெண்களின் நினைவாக கன்னிமார் சாமி பூஜை செய்து வழிபாடு செய்வதும் ஆடிப்பெருக்கின் சிறப்பாகும்.

பவானி கூடுதுறை

இந்த அத்தனை பாரம்பரிய சடங்குகளுக்கும் ஏற்ற ஒரே இடமாக தொன்று தொட்டே விளங்குவது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கூடுதுறையாகும். அதுமட்டுமின்றி வேதநாயகி தாயார், சங்கமேஸ்வரர், ஆதிகேசவ பெருமாள் என்று 3 பெரும் தெய்வங்கள் பக்தர்களை இந்த நாளில் காவிரி கூடுதுறையில் ஆசி அளிப்பது இன்னும் சிறப்பாகும்.

எனவே அனைத்து சிவன் கோவில்கள், விஷ்ணு கோவில்களுக்கு சென்று வழிபடும் அனைத்து புண்ணியங்களும் பவானி கூடுதுறையில் காவிரியில் நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுவதன் மூலம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

பக்தர்கள் வருகை

எனவே ஆடிப்பெருக்கு விழாவில் பக்தர்கள் குவிந்து வருவது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாகும். அதன்படி நேற்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணிக்கே கூடுதுறைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நேற்று கூட்டம் குறைவாகவே இருந்தது. இதில் சிலர் பரிகார பூஜைகள் செய்து, காவிரியில் நீராடினார்கள். மற்றவர்கள் நேரடியாக காவிரி கூடுதுறைக்கு சென்று புனித நீராடினார்கள்.

ஆண்கள் நீராடவும், பெண்கள் நீராடவும் தனித்தனியாக இட வசதி செய்யப்பட்டு இருந்தது. காவிரியில் தண்ணீர் அதிகமாக வருவதால் படித்துறைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. புனித நீராடிய பக்தர்கள் அங்குள்ள அரசமரத்தடி விநாயகரை சுற்றி வலம் வந்து வழிபாடு செய்தனர். இதுபோல் பரிகார பூஜை செய்தவர்கள் விநாயகர், நாகர் சிலைகளுக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். அமுதலிங்கம், ஆயிரம் முக லிங்கம் கோவில்களிலும் பக்தர்கள் சாமியை வழிபட்ட பின்னர் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த சங்கமேஸ்வரரையும் தொடர்ந்து வேதநாயகி தாயார், ஆதி கேசவபெருமாள் என சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை வரை பல்லாயிரம் பேர் கூடுதுறைக்கு வந்து காவிரியில் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

கன்னிமார் பூஜை

ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள், புதுமண தம்பதிகள் கூடுதுறைக்கு வந்தனர். குடும்பத்தினருடன் வந்த அவர்கள் காவிரிக்கரையில் விளக்கேற்றி வழிபாடு செய்த பின்னர், அவர்களின் திருமணத்தின் போது அணிந்திருந்த பூ மாலைகளை பக்தியுடன் காவிரியில் விட்டு வணங்கினார்கள். பின்னர் குடும்பத்தில் பெரியவர்கள் முளைப்பாரிகள் வைத்து கன்னிமார் பூஜை செய்தனர். காவிரி ஆற்றில் இருந்து 7 கற்கள் எடுத்து தூய்மை செய்து சாமியாக வைத்தனர். மஞ்சள், சந்தனம் பூசி, பூக்கள் போட்டு அலங்காரம் செய்தனர். தலைவாழை இலைபோட்டு தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களை படைத்தனர். அகர்பத்தி ஏற்றியும், விளக்கு வைத்தும், கற்பூரம் காட்டியும் பூஜை செய்தனர்.

இந்த பூஜையில் மஞ்சள் தடவிய நூல் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இதுபோல் சிவப்பு நிற துணியும் வைக்கப்பட்டு இருந்தது. அரிசி, வெல்லம், பொட்டுக்கடலை கலந்த பிரசாதமும் படைக்கப்பட்டது. பூஜை முடிவில் பிரசாதத்தை அக்கம்பக்கத்தினருக்கு வழங்கினார்கள். இதுபோல் மஞ்சள் நூலினை சுமங்கலிகள் தாலி பிரித்து கட்டினார்கள். புதுமணப்பெண்களுக்கு, புதுமாப்பிள்ளைகள் தாலி பிரித்து கட்டினார்கள். திருமணம் ஆகாத பெண்கள், ஆண்கள் கையில் கட்டிக்கொண்டனர். குடும்பத்தில் பெரியவர்களின் கால்களில் விழுந்து அனைவரும் ஆசி பெற்றனர்.

வடமாநிலத்தவர்கள்

மேலும் சில வடமாநிலத்தவர்களும் தங்களது முன்னோர்களை வழிபட்டனர். பவானி கூடுதுறையில் நேற்று பரிகார பூஜைகள் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. இதுகுறித்து கோவில் அர்ச்சகர் குணசேகரன் கூறியதாவது:-

ஆடிப்பெருக்கு காவிரியில் புனித நீராடுவதற்கு ஏற்ற நாள் என்றாலும், இந்த தினத்தில் பலரும் பரிகார பூஜைகள் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு புரோகிதர்களுக்கு ஏமாற்றமாகி விட்டது. இதற்கு காரணம் ஆடி மாதம் 1-ந் தேதியும், 31-ந் தேதியும் (ஆகஸ்டு 16) என 2 நாள்கள் அமாவாசை வருகிறது. முதல் நாள் அமாவாசை சூன்ய அமாவாசையாகும். கடைசிநாள் வரும் அமாவாசை சிறப்பு அமாவாசையாகும். எனவே பெரும்பாலானவர்கள் இந்த அமாவாசையின் போது பரிகாரம் செய்ய உள்ளனர். திருமண தடை பரிகாரம், முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி உள்ளிட்ட பூஜைகளை பலரும் செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story