ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி முதல் வாரத்தில் நிலைநிறுத்தப்படும்-திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி பேட்டி


ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி முதல் வாரத்தில் நிலைநிறுத்தப்படும்-திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி பேட்டி
x

ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நிலை நிறுத்தப்படும் என்று அதன் திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி கூறினார்.

திருச்சி

ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நிலை நிறுத்தப்படும் என்று அதன் திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி கூறினார்.

உன்னத தொழில்நுட்ப பெண்மணி விருது

திருச்சி மண்டல பொறியியல் கல்லூரி - அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் பூங்கா அமைப்பு சார்பில் உன்னத தொழில்நுட்ப பெண்மணி விருது மற்றும் இணைய தொழில்முனை திறன் பயிற்சி தொடக்க விழா திருச்சியில் நடைபெற்றது. விழாவுக்கு அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஜவகர் தலைமை தாங்கினார். அமைப்பின் உதவி பொதுமேலாளர் பிந்து வரவேற்றார்.

தமிழ்நாடு அறக்கட்டளை தலைவர் ராஜரத்தினம், ஞானம் பிசினஸ் பள்ளி இயக்குனர் சுந்தர்சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு உன்னத தொழில்நுட்ப பெண்மணி விருது வழங்கப்பட்டது.

முன்னணி நாடாக...

விருதை பெற்றுக்கொண்ட நிகர் ஷாஜி பேசும்போது, விக்ரம் சாராபாய் இந்தியா விண்வெளி ஆய்வு திட்டத்தை அறிவித்த போது இந்தியா போன்ற ஏழை நாட்டுக்கு விண்வெளி ஆராய்ச்சி தேவையா? என்று பலரும் கேட்டனர். ஆனால் தற்போது உலகளவில் இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணி நாடாக திகழ்கிறது. இதனால் தான் நாசா, ஈசா போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து பணிபுரிகின்றனர். இஸ்ரோ தொடங்கப்பட்டதற்கான முக்கிய நோக்கம் விண்வெளி ஆராய்ச்சி மூலம் தனி மனித வாழ்க்கையையும், சமுதாயத்தையும் உயர்த்துவதற்காகதான் என்றார்.

ஜனவரியில் நிலை நிறுத்தப்படும்

இதைத்தொடர்ந்து பசுமை சார்ந்த, பருவநிலை மாற்றம் சார்ந்த பெண்களின் சிறு, குறு தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக 30 பெண்களுக்கு விருதுகளை திட்ட இயக்குனர் நிகர ்ஷாஜி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆதித்யா எல்-1 விண்கலம் 12 லட்சம் கிலோ மீட்டரை கடந்து உள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் அது நிலைநிறுத்தப்படும். அதன் பின்பு முழு சோதனைகள் நடைபெறும். சூரியனை பற்றி நிறைய தகவல்கள் இருக்கிறது. சூரியனிலிருந்து கற்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. நம் பூமியில் உள்ள புவி ஈர்ப்பு சக்தியால் நாம் பாதுகாக்கப்படுகிறோம்.

முன்பெல்லாம் வானிலை ஆய்வு மையம் மழைவரும் என கூறினால் மழை வராது என கூறினோம். தற்போது அந்த நிலை மாறி வானிலை ஆய்வு மையம் மழைவரும் என கூறினால் அதேபோல் மழை வருகிறது. சூரியனிலிருந்து எப்பொழுது கதிர் வருகிறது என்பது குறித்து ஆராய்ச்சிகள் செய்யவில்லை.

சூரியனின் மையப்பகுதியில் இருந்து பெறக்கூடிய ஒளிக்கதிர் மூலமாக நாம் ஒளி பெறுகிறோம். சூரியனின் மைய பகுதியை விட, சூரியனிலிருந்து வெளிவரக்கூடிய ஒளி கதிரானது அதிகப்படியான வெப்பத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக சூரியனை நெருங்க முடியவில்லை. இதற்கான சரியான ஆய்வுகளை யாரும் செய்யவில்லை. நாம் இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம்.

சந்திரயான் 3-ல், விக்ரம் லாண்டரில் இருந்த, ரோவர் தூக்க நிலையில் உள்ளது. அங்கு உள்ள வெப்ப நிலை மைனஸ் 200 டிகிரி. அதன் உள்ளே இருந்த எரிபொருள் உறைந்து இருக்கலாம். தூக்க நிலையில் இருந்து எழுவதற்கு வாய்ப்புகள் மிகக்குறைவு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story