கோடநாடு வழக்கு விசாரணை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பு

ஊட்டி கோர்ட்டில் கோடநாடு வழக்கு விசாரணை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஊட்டி
ஊட்டி கோர்ட்டில் கோடநாடு வழக்கு விசாரணை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கோடநாடு வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் 316 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக கைது செய்யப்பட்ட 10 பேர் தவிர சசிகலா, ஜெயா டி.வி. தலைமை செயல் அதிகாரி விவேக், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, விபத்தில் இறந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
வாளையாறு மனோஜ் மட்டும் ஆஜர்
இதற்கிடையில் கோடநாடு வழக்கு, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் 49 பேர் கொண்ட குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இந்த நிலையில் ஊட்டி கோர்ட்டில் கடந்த மாதம் கோடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.சி.ஐ.டி. போலீசார் இடைக்கால விசாரணை அறிக்கையை ஏன் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதி அப்துல் காதர் கேள்வி எழுப்பினார். மேலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 8 செல்போன்களில் பதிவாகி உள்ள தகவல்களை பெறுவதற்காக, அவை ஊட்டி கோர்ட்டில் இருந்து கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மீண்டும் கோடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகான், சி.பி.சி.ஐ.டி. தரப்பில் போலீஸ் சூப்பிரண்டு மாதவன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் ஆகியோர் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் வாளையாறு மனோஜ் மட்டும் ஆஜரானார். மாவட்ட நீதிபதி அப்துல் காதர் விடுமுறையில் இருந்ததால், குடும்ப நல கோர்ட்டு நீதிபதி ஸ்ரீதரன் வழக்கை விசாரித்தார்.
வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
அப்போது, சாட்சிகள் விசாரணை தீவிரமாக நடந்து வருவதாகவும், சி.பி.சி.ஐ.டி. குழுவினர் மேற்கு வங்கத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறி அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதனால் வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் மாதம் 8-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அரசு வக்கீல் ஷாஜகான் கூறும்போது, தற்போது வழக்கில் நடந்து வரும் புலன் விசாரணை குறித்து நீதிபதியிடம் எடுத்துக்கூறப்பட்டது. சில செல்போன் உரையாடல்களின் அறிக்கைகள், குஜராத் கோர்ட்டில் அனுமதியுடன் பெற வேண்டி உள்ளது. மேலும் 19 செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது என்றனர்.






