அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு
நாமக்கல்:
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளுக்கு ஈடாக அரசு பள்ளிகளில் உள்ள வசதிகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜெகதீசன், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். குறிப்பாக கொல்லிமலையில் கிராமம், கிராமமாக சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு வழங்கினர்.
அதில் அரசு பள்ளியில் உள்ள சிறப்பு அம்சங்கள், அரசு பள்ளியில் படிப்பதால் கிடைக்கும் சலுகைகள், அரசின் திட்டங்கள், இட ஒதுக்கீடு உள்பட பல்வேறு தகவல்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளியில் உள்ள நூலகங்கள், தலைசிறந்த ஆசிரியர்கள் மற்றும் ஆய்வுக்கூடங்களின் விவரங்களை ஆசிரியர்கள் பெற்றோருக்கு விளக்கி கூறினர். அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள், செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் இல்லத்திற்கே நேரில் வந்து மாணவர்களை சேர்த்து கொள்கிறோம் என ஆசிரியர்கள் கூறினர்.