அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை
வேலூரில் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கையை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார்.
மாணவர் சேர்க்கை
அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பிள்ளையார்குப்பத்தில் உள்ள ஜி.ஜி.ஆர். பொறியியல் கல்லூரியில் அரசு மாதிரி பள்ளி கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு 12-ம் வகுப்பில் 80 மாணவ- மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
அவர்களுக்கு நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளுக்கு தயார்படுத்துவதற்கான வகுப்புகளும் நடத்தப்படுகிறது. மாணவ- மாணவிகளுக்கு விடுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த பள்ளியில் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவ- மாணவிகள் சேர்க்கை நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி சேர்க்கையை தொடங்கி வைத்து, அவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். மேலும், அவர் மாணவ- மாணவிகளிடம் கேள்விகள் கேட்டு கலந்துரையாடினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி முன்னிலை வகித்தார். கல்லூரி தாளாளர் ஜி.ஜி.ஆர்.கோகுல் வரவேற்றார்.
சிறந்த மதிப்பெண்கள்
பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசியதாவது:-
கல்வியை விட சிறந்த செல்வம் வேறெதுவும் இல்லை என்று பாரதியார் கூறினார். கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்பதற்கு ஏற்ப நாம் கல்வியில் சிறந்தவர்களாக இருக்கிறோம். மேலும் சிறந்து விளங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தான் இந்த மாதிரி பள்ளி திட்டம்.
மாணவர்கள் தங்க இடம் ஏற்படுத்தப்பட்டு சிறந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அனைவரும் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நன்கு படித்து சிறந்த மதிப்பெண்கள் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மாணவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். இதில் தலைமை ஆசிரியை தாரகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.