"அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும்" எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
“வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி பரபரப்பாக பேசினார்.
தென்காசி,
அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், சங்கரன்கோவிலில் நேற்று மாலையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடம் பிடித்தது. ஏழை-எளிய மக்களுக்காகவே அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தினோம். பள்ளி குழந்தைகளின் பட்டினியை போக்க தொடங்கப்பட்ட சத்துணவு திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்கிறது.
ஆனால், தமிழகத்தில் தற்போது தி.மு.க.வின் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒரு குடும்பத்துக்காகவே தொடங்கப்பட்ட கட்சிதான் தி.மு.க.
தி.மு.க. எப்போதும் கார்ப்பரேட் கம்பெனி போன்றே செயல்படுகிறது. அதன் தலைவராக மு.க.ஸ்டாலினும், இயக்குனர்களாக துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, சபரீசன் போன்றவர்களும் உள்ளனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2½ ஆண்டுகளாகியும் எந்தவொரு புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களையே ரிப்பன் வெட்டி திறந்து வைக்கின்றனர். மக்களை பற்றி கவலைப்படாத பொம்மை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
ஊழல் மாடல் ஆட்சி
தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. மின்கட்டணத்தை உயர்த்தி விட்டனர். மின்சாரத்தை கேட்டால்தான் ஷாக் அடிக்கும், ஆனால் தற்போது மின்கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கின்றது. சொத்துவரியை 100 சதவீதம் உயர்த்தி விட்டனர். குப்பைக்கும் வரி போட்டு விட்டனர். சாலை வரி உயர்த்தப்பட்டு உள்ளது. பத்திரபதிவு வழிகாட்டு மதிப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பெருகி விட்டது. விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு பற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க. தற்போது அந்த வாக்குறுதியை மறந்துவிட்டது. இதையெல்லாம் திசை திருப்ப சனாதனம் குறித்து பேசுகின்றனர். திராவிட மாடல் என்று பெயர் வைத்து கொண்டு ஊழல் மாடல் ஆட்சி நடத்தி வருகின்றனர். கமிஷன் இல்லாத துறையே இல்லை. தி.மு.க. ஆட்சி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும் தி.மு.க. அரசு திருமண மண்டபங்களில் மது விற்க முயல்கின்றனர். மகளிர் உரிமைத்தொகையை தி.மு.க.வினருக்கும், பணக்காரர்களுக்கும்தான் கொடுக்கின்றனர். ஏழைகளை ஏமாற்றி விட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெற்றி பெறாது.
அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. யாரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் என்று கேட்கிறார்கள். இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று கூற முடியுமா?. அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். தமிழக மக்களின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்போம். ஒருபோதும் தமிழர்களின் உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம். சிறுபான்மை மக்களை பாதுகாப்போம். தமிழர்கள்தான் எங்கள் எஜமானார்கள். அவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்வோம். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். 2024 நாடாளுமன்ற தேர்தலின் வெற்றி 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக இருக்கும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.