அ.தி.மு.க. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி


அ.தி.மு.க. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
x

உசிலம்பட்டி 58-ம் கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, அ.தி.மு.க. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை

உசிலம்பட்டி 58-ம் கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, அ.தி.மு.க. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

போராட்டம்

உசிலம்பட்டி மக்களின் 40 ஆண்டு கால கனவு திட்டமான, 58-ம் கிராம கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி தந்தவர் எடப்பாடி பழனிசாமி. அவரது தலைமையிலான அ.தி.மு.க. அரசு ரூ.82 கோடியே 67 லட்சம் செலவில் இந்த திட்டத்தை நிறைவேற்றியது. அதோடு 3 முறை இந்த கால்வாயில் அ.தி.மு.க. அரசு தண்ணீர் திறந்தது. இந்த திட்டம் மூலம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 35 கண்மாய்கள், 2 ஆயிரத்து 285 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். வைகை அணையில் தற்போது முழு கொள்ளளவு தண்ணீர் இருந்த போதும், 58 கிராம கால்வாயில் தமிழக அரசு தண்ணீர் திறக்கவில்லை. அதனால் விவசாயிகள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தனர்.

இது குறித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பாக எனது தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது கலெக்டர், தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

கடைசி கண்மாய்

இந்த நிலையில் நேற்று முதல் 58-ம் கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திறப்பு முழுக்க, முழுக்க அ.தி.மு.க.வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். 58-ம் கால்வாயில் தற்போது தினமும் 300 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் கடைசி கண்மாய் வரை சென்று சேருவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் முழுமையாக கண்மாய்கள் நிரம்பும் வரை தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும். அதே போல் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் 58-ம் கிராம கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கு வசதியாக உரிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story