கோவிலில் தீபம் ஏற்றுவதில் வாக்குவாதம்; தி.மு.க.வினர் மீது ஓ.பன்னீர்செல்வம் மகன் பரபரப்பு குற்றச்சாட்டு
பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, தி.மு.க.வினர் மீது ஓ.பன்னீர்செல்வம் மகன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். அர்ச்சகரை தி.மு.க. எம்.எல்.ஏ. தடுத்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, தி.மு.க.வினர் மீது ஓ.பன்னீர்செல்வம் மகன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். அர்ச்சகரை தி.மு.க. எம்.எல்.ஏ. தடுத்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
தி.மு.க.-அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோவிலில், நேற்று திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடந்தது. இதற்காக தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் உள்பட தி.மு.க.வினரும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், அன்பர் பணி செய்யும் பராமரிப்புக்குழு தலைவருமான ஜெயபிரதீப் மற்றும் அ.தி.மு.க.வினரும் அங்கு வந்திருந்தனர். அப்போது தீபம் ஏற்றும் போது தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவில் அர்ச்சகர் ஏற்ற வேண்டும் என்று அ.தி.மு.க.வினரும், செயல் அலுவலர் ஏற்ற வேண்டும் என்று தி.மு.க.வினரும் கோஷமிட்டனர். பின்னர் அர்ச்சகர் தீபம் ஏற்றினார்.
தவறான நடைமுறை
இந்த சம்பவத்தை தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனை, தங்கதமிழ்செல்வன் சந்தித்து இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "தி.மு.க.வினரை மேடையில் ஏற்றி நிற்க வைத்துவிட்டு, ஓ.பன்னீர்செல்வம் மகன் மற்றும் குடும்பத்தினருக்கு பரிவட்டம் கட்டி தீபம் ஏற்றினர். இந்த நடைமுறை தவறு என்றும், அரசு அதிகாரிகள் தான் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் கலெக்டரிடம் கூறினோம்" என்றார்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் தலைமையில், அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டர் முரளிதரனை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து முறையிட்டு தங்கள் தரப்பு கோரிக்கையை முன்வைத்தனர்.
பரபரப்பு குற்றச்சாட்டு
இதற்கிடையே, ஜெயபிரதீப் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கண்டன வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே கைலாசபட்டி, கள்ளிப்பட்டி, தாமரைக்குளம், பெரியகுளம், தேனி போன்ற ஊர்களில் இருக்கும் முக்கிய பக்தர்களை அழைத்து திருவிழாவை எப்படி நடத்துவது என்று ஆலோசனை நடத்தினோம். 15 ஆண்டுகளாக இப்படி தான் நடத்தி வருகிறோம். அழைப்பிதழ் அச்சடிக்க கோவில் செயல் அலுவலரிடம் அனுமதி கேட்டோம். 15 நாட்களாக எந்த பதிலும் வராததால் அன்பர் பணி செய்யும் குழுவினரால் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது. அதையும் கொடுக்க விடாமல் பறித்துக்கொண்டனர்.
பெரியகுளம் எம்.எல்.ஏ. தான் இந்த முறை தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு குழுவின் செயலாளர், எங்களுடன் சிவதொண்டராக பணியாற்றி, கோவில் கட்டுவதற்கு உதவிகள் செய்த ஓ.பன்னீர்செல்வம் தான் ஏற்ற வேண்டும் என்று தெரிவித்தார். செயல் அலுவலரிடம் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதால், திருவிழா சிறப்பாக நடக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அர்ச்சகர் தீபம் ஏற்றட்டும் என்று அனுமதி கொடுத்தோம்.
வீடியோ வைரல்
கார்த்திகை தீபம் ஏற்றும் நேரத்தில் 150 பேருடன் தங்கதமிழ்செல்வன், சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் அங்கு வந்து எம்.எல்.ஏ. தான் தீபம் ஏற்ற வேண்டும் என்றனர். அவர்களை பரிவட்டம் கட்டுவதற்கு அழைத்தோம். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாமல் நேரடியாக தீபம் ஏற்றும் இடத்துக்கு சென்றார்கள். அவர்களாக ஒரு தீபம் ஏற்ற முயன்றார்கள். அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு அராஜக செயலில் ஈடுபடும் தி.மு.க.வினரை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, தீபம் ஏற்ற முயன்ற அர்ச்சகரை சரவணக்குமார் எம்.எல்.ஏ. வேட்டியை பிடித்து இழுத்து தடுக்க முயற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்துக்கு தேனி மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர், பா.ஜ.க.வினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்து இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கலெக்டர் முரளிதரன் விளக்கம் கேட்டுள்ளார்.