கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது


கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது
x

எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 105 அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்

போராட்டம்

சட்டசபையில் அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.ஆனாலும் தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு..க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

சாலைமறியல்

இந்நிலையில் இதனை கண்டித்து கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று அமைப்பு செயலாளர் சின்னசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா ஆகியோர் தலைமையில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் ரவுண்டானா வரை அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்தனர்.தொடர்ந்து மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதில் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட 105 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story