தொகுதியில் உள்ள 10 கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு
தொகுதியில் உள்ள 10 கோரிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட கலெக்டரிடம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்தனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பாலசுப்பிரமணியம் (சேலம் தெற்கு), ஜெயசங்கரன் (ஆத்தூர்), நல்லதம்பி (கெங்கவல்லி), சித்ரா (ஏற்காடு) ஆகியோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது தொகுதியில் நீண்ட நாட்களாக நிலவும் 10 முக்கிய திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுக்களை கலெக்டர் கார்மேகத்திடம் தனித்தனியாக வழங்கினர். அப்போது, மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க.நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.
இதுகுறித்து சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், சேலம் மாநகராட்சி 50-வது வார்டு ஜாரி கொண்டலாம்பட்டியில் நவீன வசதியுடன் மருத்துவ வளாகம், சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட மேம்பாலம், கொண்டலாம்பட்டி மற்றும் அம்மாப்பேட்டை பகுதியில் புறநகர் பஸ் நிலையம், அம்மாப்பேட்டை கூட்டுறவு நூற்பாலையில் நவீன விளையாட்டு மைதானம், தெற்கு தொகுதியில் அரசு கலைக்கல்லூரி உள்பட 10 முக்கிய திட்டங்களை நிறைவேற்றி தருமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.
இதேபோல், ஏற்காட்டில் உள்ள சேர்வராயன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைத்தல் மற்றும் கோவில் வளாகத்தை சுற்றி பூங்கா அமைக்க வேண்டும், ஏற்காடு அண்ணா பூங்கா முதல் மான் பூங்கா வரை ஏரியை கடந்து செல்லும் வகையில் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் உள்பட 10 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு சித்ரா எம்.எல்.ஏ. கொடுத்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.