அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

துப்புரவு பணியாளர்கள் 124 பேர் இருப்பதாக கணக்கு காட்டி மோசடி நடைபெறுவதாக கூறிய அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்

நகராட்சி கூட்டம்

அரியலூர் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சாந்தி கலைவாணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி அலுவலர் தீர்மானங்களை வாசிக்க தொடங்கினார். அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஏற்கனவே 3 முறை வாசிக்கப்பட்ட தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்தநிலையில் இன்றும் தீர்மானங்கள் வாசிப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர். மேலும், நகராட்சி தலைவர் அலுவலகத்திற்கு முறையாக வருவதில்லை என குற்றம் சாட்டினர்.

ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 124 பேர் என கணக்கு காட்டி அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால் வேலை செய்வதோ 90 பேர் தான். எனவே பணம் மோசடி நடப்பதாக குற்றம் சாட்டிய கவுன்சிலர்கள் மீதமுள்ள பணம் யாருக்கு, எங்கு செல்கிறது என கேள்வி எழுப்பினர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளிருப்பு போராட்டம்

கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில், நகராட்சியில் பொது நிதி எவ்வளவு உள்ளது. எந்தெந்த வங்கியில் கணக்கு உள்ளது என கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை. பஸ் நிலையத்தில் உள்ள தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் ஏலம் எடுக்காமல் சட்டத்துக்கு புறம்பாக தனிநபர் வசூல் செய்து வருகிறார் என்று கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் போதே நகராட்சி அலுவலர் செந்தில்குமார் தீர்மானங்களை வாசித்து முடித்தார். அதன் பின்னர் கூட்டம் முடிந்து விட்டதாக தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து, மாலை 5.30 மணியளவில் ஆர்.டி.ஓ. சரவணன் அ.தி.மு.க. கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் மாலை 6.30 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story