கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் உள்ளிருப்பு போராட்ட முயற்சி
58-ம் கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். ஆனால் கலெக்டர் அனிஷ்சேகர் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.
58-ம் கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். ஆனால் கலெக்டர் அனிஷ்சேகர் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.
சோதனை ஓட்டம்
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். அங்கு அவர்கள், 58-ம் கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்த முயற்சித்தனர். ஆனால் அவர்களிடம் மனுவை பெற்று கொண்ட கலெக்டர் அனிஷ் சேகர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதனை ஏற்று கொண்ட உதயகுமார் மற்றும் அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
பின்னர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
வைகை அணையில் 70.44 அடி தண்ணீர் உள்ளது, வைகை அணையில் 67 அடி நீர் இருந்தாலே போதும், 58-ம் கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்கலாம். ஆனால் உசிலம்பட்டி விவசாயிகளின் வேதனையை அரசு கவனத்தில் கொள்ளாமல் உள்ளது. இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. 58-ம் கிராம கால்வாய் திட்டம் 110 கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன பெறும் திட்டமாகவும் உள்ளது. 58-ம் கால்வாய் திட்டத்தில் தினமும் 316 கன அடி வீதம் 11 நாட்களுக்கு நீர் திறந்தாலே 35 கண்மாய்கள் நிறைந்து விடும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.65 லட்சத்தில் கால்வாய் மராமத்து பணி செய்யப்பட்டு, 3 முறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
போராட்டம்
நாங்கள் 58-ம் கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த வந்தோம். ஆனால் கலெக்டர் எங்களிடம் கனிவோடு பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். எனவே தற்காலிமாக எங்களது போராட்டத்தை தள்ளி வைத்து மனு கொடுத்து இருக்கிறோம். 58-ம் கிராம கால்வாயில் தண்ணீர் திறக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு கொண்டு சென்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.
முல்லை பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறைப்படி செப்டம்பர் மாதம் 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 142 அடி நீர் தேக்கலாம். ஆனால் தற்போது 137.95 அடி நீர் தான் உள்ளது. எனவே 142 அடி நீர் தேக்க வேண்டும். முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கலாம் என்று ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு பெற்று கொடுத்தார். எனவே 5 மாவட்ட விவசாயிகள் சார்பாக ஜெயலலிதாவிற்கு மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த பாராட்டு விழா நடந்த அம்மா திடலை கலைஞர் அரங்கமாக மாற்றி விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.