அ.தி.மு.க. வேட்பாளருக்கு பா.ஜ.க. ஆதரவு -அண்ணாமலை அறிவிப்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர் தென்னரசுவுக்கு பா.ஜ.க. முழு ஆதரவு தெரிவிப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.
சென்னை,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பல்வேறு சிக்கல்களை கடந்து அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு பா.ஜ.க. முழு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.
முழு ஆதரவு
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும், கே.எஸ்.தென்னரசுக்கு பா.ஜ.க. தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக, சட்டபூர்வ அ.தி.மு.க. வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆளும் கட்சியின் அராஜகங்களை, ஊழல்களை அத்துமீறல்களை, மக்கள் விரோத போக்கை, கொடுத்த வாக்கில் எதையும் நிறைவேற்ற முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் திறனற்ற தி.மு.க. அரசை, வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கும், நாம் அனைவரும், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
கண்ணுறக்கம் இல்லாமல் உழைக்க வேண்டும்
குறிப்பாக, பா.ஜ.க.வின் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும். இந்த வெற்றி, வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும் வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் உழைக்க வேண்டி இருக்கும்.
ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம், அளவின்றி குவித்திருக்கும் பணபலம், என்று எத்தனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன், நாம் மனதார உழைக்க வேண்டும் என்று பா.ஜ.க. சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளராக களம் காணும் கே.எஸ்.தென்னரசுக்கு நல்வாழ்த்துகளையும், பா.ஜ.க.வின் நல்லாதரவையும், தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.