'அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. என்றுமே தலையிடாது' -அண்ணாமலை பேட்டி
‘அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. என்றுமே தலையிடாது' தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி.
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் வளாகத்தில் நேற்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய சமூகநீதித்துறை அமைச்சகம் சார்பில் யோகாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த யோகாசன நிகழ்ச்சியை மத்திய சமூகநீதித்துறை இணை மந்திரி நாராயணசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்து பொதுமக்களுடன் சேர்ந்து யோகாசனம் செய்தனர்.
இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் தமிழகத்தில் உள்ள மூத்த யோகாசன பயிற்சியாளர்கள் 75 பேருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், சித்தா நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.மீனாகுமாரி, சென்னை கலங்கரை விளக்கம் மற்றும் விளக்கு கலங்கள் இயக்குனர் கார்த்திக் செஞ்சுடர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
யோகா செய்வதால் உடலும், மனதும் வலிமை பெறும். மால்லபுரத்தில் நடைபெற உள்ள ஒலிம்பியாட் போட்டியை காண பிரதமர் மோடி வருவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. என்றுமே தலையிடாது. அதுபற்றி கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களிலும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கட்சி தொண்டர்களுக்கு யோகா பயிற்சியை வழங்கினார்.