அ.தி.மு.க. - பா.ஜ.க. உறவில் விரிசல் இல்லை -எடப்பாடி பழனிசாமி பேட்டி


அ.தி.மு.க. - பா.ஜ.க. உறவில் விரிசல் இல்லை -எடப்பாடி பழனிசாமி பேட்டி
x

அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவில் விரிசல் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடியில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆத்தூரில் சமீபத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது, அ.தி.மு.க. ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்றும், குறிப்பாக எடப்பாடி தொகுதியில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை என்றும் ஒரு தவறான குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.

ஆனால் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோதும், அவரது மறைவுக்கு பின்பும் எடப்பாடி தொகுதி மட்டுமல்லாமல் சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. - பா.ஜ.க. உறவு

கடலூர் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் தருவதாக அரசு அறிவித்துள்ளது. அந்த நிவாரணம் ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவில் விரிசல் இல்லை. கூட்டணி நன்றாக உள்ளது. ஒவ்வொரு கட்சியும் வளர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று பேசுவதுண்டு. பா.ஜ.க.வை பற்றி முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசிய கருத்து அவரது சொந்த கருத்தாகும் என்று கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து விட்டார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டில் நில அபகரிப்பு, கஞ்சா விற்பனை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. அதை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அதை மறைப்பதற்காகவும், திசை திருப்புவதற்காகவும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது பொய் வழக்குப்பதிவு செய்கிறார்கள்.

தேர்தல் அறிக்கை

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியுள்ளனர். இந்தியாவில் தமிழகம்தான் அனைத்து துறைகளிலும் முதலிடத்தில் உள்ளதாகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சிறந்த முதல்-அமைச்சராகவும் கூறி வருகிறார்கள். உண்மைதான், அதாவது, ஊழல் செய்வதில் தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு முதலிடத்தில் உள்ளது.

விசைத்தறி தொழில், நெசவு தொழில் தற்போது நூல் விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலை ஏற்றம் குறித்து சட்டப்பேரவையில் தெரிவித்தோம். தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை. மேலும் பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது அவரிடம் நூல் விலை குறைப்பு சம்பந்தமாக கோரிக்கை வைத்தேன். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமரிடம் பல கோரிக்கைகள் வைத்தார். அதில் நூல் விலை ஏற்றம் குறித்து தெரிவிக்கவில்லை. வருமானம் எதில் கிடைக்குமோ அந்த கோரிக்கைகளை மட்டும் பிரதமரிடம் தெரிவித்தார்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Next Story