அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!


அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!
x

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.23 லட்சம் பணம், 4.87 கிலோ தங்கம், 136 ஹார்டு டிஸ்க்குகள், கனரக வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை

அ.தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையால் நீதிமன்றங்களில் இன்று காலை காலை 10 மணியளவில குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பம், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.

கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தர்மபுரி நீதிமன்றத்தில் இன்று குற்றபத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கேபி அன்பழகன். இவர் தர்மபுரி பாலக்கோடு தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், அதாவது 2016ஆம் ஆண்டு காலகட்டம் முதல் 2021 ஆம் ஆண்டு வரைக்கும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாகவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை ஐகோர்ட்டில் புகார்தாரர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தாலும் இதுவரைக்கும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. அதனால் உடனே அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு கடந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை அடுத்து அன்பழகன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தர்மபுரி நீதிமன்றத்தில் இன்று குற்றபத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கே.பி. அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை, தர்மபுரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் அன்பழகன் பெயரிலும் அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக 11 கோடி 32 லட்சத்து 95 ஆயிரத்து 85 ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக தெரிய வந்தது.

தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 18.10.2021 அன்று புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். 56 இடங்களில் குறிப்பாக டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. அவர் அமைச்சராக இருந்தபோது 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது. இதில் அவர் ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.23 லட்சம் பணம், 4.87 கிலோ தங்கம், 136 ஹார்டு டிஸ்க்குகள், கனரக வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் அடுத்த கட்டமாக இன்று புதுக்கோட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பம், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.


Next Story