அ.தி.மு.க. மாநாட்டில் கனிமொழியை விமர்சித்து பாடல்: மகளிர் ஆணையத்தில் தி.மு.க. மகளிரணி புகார் மனு
அ.தி.மு.க. மாநாட்டில் கனிமொழியை தரக்குறைவாக விமர்சித்து பாடல் பாடப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில மகளிர் ஆணையத்தில், தி.மு.க. மகளிரணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அ.தி.மு.க. பொன்விழா மாநாடு கடந்த 20-ந்தேதி மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளரான கனிமொழி எம்.பி.யை அவதூறாக விமர்சிக்கும் வகையிலான பாடல் இடம்பெற்றது. இந்தப்பாடல் பேஸ்புக், 'எக்ஸ்' என்ற டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது தி.மு.க. மகளிரணியினர் உள்பட கட்சியினர் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், தி.மு.க. மாநில பிரசாரக்குழு செயலாளர் அண்ணாநகர் ராணி, சமூக வலைத்தள பொறுப்பாளர் ரத்னா லோகேஷ் உள்பட தி.மு.க. மகளிரணியைச்சேர்ந்த நிர்வாகிகள், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில், அதன் தலைவர் ஏ.எஸ்.குமரியை நேற்று நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு கொடுத்தனர்.
கைது செய்யவேண்டும்
இதையடுத்து, தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மதுரையில் கடந்த 20-ந்தேதியன்று நடைபெற்ற அ.தி.மு.க.வின் மாநில மாநாட்டில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழியை தரைக்குறைவாக விமர்சிக்கும் வகையில் பாடல் பாடப்பட்டது. அங்கு இருந்த முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கைதட்டி சிரிக்கிறார்கள். நாட்டின் சிறந்த ஆளுமைகளில் ஒருவர் கனிமொழி கருணாநிதி. அவரை தரக்குறைவாக பேசியவரை கைது செய்யவேண்டும். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கனிமொழி கருணாநிதியை தரக்குறைவாக விமர்சித்து பாடிய செயலை தமிழக மகளிர் அணி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமரி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக மகளிர் அணி சார்பாக தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.