அ.தி.மு.க.-தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில், அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநகராட்சி கூட்டம்
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம், மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் இளமதி தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜப்பா, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் செயற்பொறியாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-
ராஜ்மோகன் (அ.தி.மு.க.):- 48 வார்டுகளிலும் தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. அதை கணக்கெடுத்து தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். 4-வது வார்டு பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த வேண்டும்.
ஆணையர்:- அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்த தெருவிளக்குகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 800 தெரு விளக்குகள் வந்துள்ளன. விரைவில் அவற்றை பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற உள்ளது. தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்து, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
வீடுகட்ட அனுமதிக்கு பணம்
பாஸ்கரன் (அ.தி.மு.க.):- எங்கள் பகுதியில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளன. குடிநீர் தொட்டிக்கான மின்மோட்டார்கள் செயல்படாமல் இருப்பதால் பல இடங்களில் தண்ணீர் வராமல் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. வீடு கட்ட அனுமதி கொடுக்க சிலர் கூடுதல் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். விடியல் அரசு என்று சொல்கிறீர்கள், ஆனால் எங்கள் வார்டில் இன்னும் விடிந்தபாடில்லை என்றார்.
இதைக்கேட்டு ஆவேசமடைந்த துணை மேயர், கூட்டத்தில் சபை நாகரிகத்தோடு பேச வேண்டும். 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளவில்லை. கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவது குறித்து ஆதார பூர்வமாக நிரூபிக்க வேண்டும். தி.மு.க. அரசு வந்த பிறகு தான் திண்டுக்கல்லுக்கு விடியல் கிடைத்துள்ளது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது பாஸ்கரனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர், அ.தி.மு.க. கவுன்சிலர்களும், துணை மேயருக்கு ஆதரவாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தேர்தல் வாக்குறுதிகள்
தனபால் (பா.ஜ.க.):- அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 உரிமைத்தொகையாக வழங்க வேண்டும். இதுதொடர்பாக பா.ஜ.க. சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனக்கூறி, அந்த தீர்மான அறிக்கையை மேயரிடம் வழங்கினார்.
அப்போது கவுன்சிலர்கள் ஆனந்த் (தி.மு.க.), ஜான்பீட்டர் (தி.மு.க.), கார்த்திக் (காங்கிரஸ்) ஆகியோர் பா.ஜ.க. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடத்துக்கு 'இந்தியா' என பெயர் சூட்ட வேண்டும். இதுதொடர்பாக மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றனர்.
தி.மு.க. கவுன்சிலருக்கு கண்டனம்
கவுன்சிலர்களின் வாக்குவாதம் முடிவுக்கு வந்ததும் உமாதேவி பாரதிமுருகன் (அ.தி.மு.க.) பேசுவதற்காக எழுந்தார். அப்போது குறுக்கிட்ட கவுன்சிலர் ஆனந்த், மன்ற பொருள் குறித்து மட்டும் பேசும்படி கூறினார்.
இதனால் கோபமடைந்த உமாதேவி பாரதிமுருகன் மக்கள் பிரச்சினை குறித்து பேச வேண்டாம் என்று என்னை தடுக்கும் கவுன்சிலர் ஆனந்தை கண்டிக்கிறேன் என்றார். அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவரும் பேசினார். பின்னர் மேயர் அனுமதி கொடுக்க உமாதேவி பாரதிமுருகன் தனது வார்டு பிரச்சினை குறித்து பேசினார்.
பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் நேற்றைய மாநகராட்சி கூட்டம் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் மொத்தம் 83 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.