அ.தி.மு.க. பொருளாளருக்கான ஆவணங்கள்-திண்டுக்கல் சீனிவாசன் சமர்ப்பித்தார்


அ.தி.மு.க. பொருளாளருக்கான ஆவணங்கள்-திண்டுக்கல் சீனிவாசன் சமர்ப்பித்தார்
x

அ.தி.மு.க. சார்பில் தேவரின் தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெறுவதற்கு அக்கட்சியின் பொருளாளருக்கான ஆவணங்களை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று சமர்ப்பித்தார்.

மதுரை

அ.தி.மு.க. சார்பில் தேவரின் தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெறுவதற்கு அக்கட்சியின் பொருளாளருக்கான ஆவணங்களை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று சமர்ப்பித்தார்.

தேவரின் தங்க கவசம்

சுதந்திர போராட்ட வீரரும், தேசிய தலைவருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை இம்மாதம் 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்க இருக்கிறது.

இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் நேரில் வந்து மரியாதை செலுத்துவார்கள்.

முத்துராமலிங்க தேவரின் தியாகத்தை போற்றும் வகையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் 13 கிலோ எடையுள்ள தேவரின் தங்க கவசத்தை வழங்கினார்.

அ.தி.மு.க. பொருளாளர்

அந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தேவர் ஜெயந்தி விழாவையொட்டி வங்கியில் உள்ள தங்க கவசத்தை அ.தி.மு.க. பொருளாளர் கையெழுத்திட்டு, அதனை தேவர் ஜெயந்தி விழாவுக்கு எடுத்து கொடுப்பது வழக்கம்.

அ.தி.மு.க.வின் பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டுகளில் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்து போட்டு பெட்டகத்தில் இருந்த கவசத்தை பெற்று, முத்துராமலிங்க தேவர் குடும்பத்தினர்- நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து, குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் பெற்று வங்கியில் ஒப்படைத்து வந்தார்.

தற்போது அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்ட நிலையில், தேவரின் தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்கு உரிமை கோருவதற்காக கடந்த வாரம் எழுத்துப்பூர்வ கடிதம் அ.தி.மு.க. சார்பில் வங்கி நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டு இருந்தது.

ஆவணங்கள் சமர்ப்பிப்பு

இந்தநிலையில் வர இருக்கிற தேவர் ஜெயந்தி, குருபூஜையை முன்னிட்டு, வங்கியில் தேவர் தங்க கவசத்தை எடுப்பது தொடர்பான அலுவல் நடைமுறைகளை மேற்கொள்வதற்காக கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று காலை மதுரை வந்தார். அவர் வங்கிக்கு சென்று, பொருளாளர் என்ற முறையில் கட்சி தனக்கு வழங்கிய உரிமை மற்றும் ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.

அதிகாரிகள் அந்த ஆவணங்களை வாங்கிகொண்டனர். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன் உள்பட பலர் சென்றிருந்தனர்.


Next Story