அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆவணங்கள் மாயம்: ஓ.பன்னீர்செல்வம் மீது புதிய வழக்கு பாயுமா?


அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆவணங்கள் மாயம்: ஓ.பன்னீர்செல்வம் மீது புதிய வழக்கு பாயுமா?
x

அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆவணங்கள் மாயமான புகாரில் ஓ.பன்னீர்செல்வம் மீது புதிய வழக்கு பதிவு செய்வதா? என்பது குறித்து ராயப்பேட்டை போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கடந்த 11-ந் தேதி பயங்கர மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தனர். அதன்பேரில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு

சம்பவத்தன்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து, அத்துமீறி உள்ளே நுழைந்து ஆவணங்களை அள்ளி சென்றுவிட்டதாக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் சைதை எம்.எம்.பாபு அளித்திருந்த புகாரின்பேரில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மீதும் ராயப்பேட்டை போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

போலீசார் ஆலோசனை

இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் சென்னை ராயப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் சார்லஸ் சாம் ராஜதுரையிடம் நேற்று முன்தினம் பரபரப்பு புகார் மனு அளித்தார். அந்த புகாரில், 'அ.தி.மு.க. அலுவலகத்தில் என்னென்ன பொருட்கள் மாயமாகி உள்ளது என்பதை பட்டியலிட்டு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களையும் அளித்திருந்தார்.

அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் அளித்த புகாரின் பேரில் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், சி.வி.சண்முகம் அளித்த புகாரில் தனி வழக்குப்பதிவு செய்யலாமா? அல்லது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருட்டு சட்டப்பிரிவை மட்டும் சேர்க்கலாமா? என்பது குறித்து ராயப்பேட்டை போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.


Next Story