அ.தி.மு.க. யாருக்கும் அடிமை இல்லை எடப்பாடி பழனிசாமி ஆவேசம்


அ.தி.மு.க. யாருக்கும் அடிமை இல்லை எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
x

அ.தி.மு.க. யாருக்கும் அடிமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார். அதில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று எடப்பாடி பழனிசாமி வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பதற்றத்துக்கு என்ன காரணம்?

அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை கைது செய்து இருக்கிறார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தவுடன் ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு பரிந்து பேசுகிறார். இன்னும் சொல்லப்போனால், அவர் வலைதளத்தில் பேசியபோது பதற்றத்தோடு பேசுகின்ற காட்சியை நான் பார்த்தேன். இந்த பதற்றத்துக்கு என்ன காரணம்?.

மக்களை பற்றி சிந்திக்கவில்லை

அ.தி.மு.க. ஆட்சிக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி வந்தது. எதற்காக உங்களுக்கு ஆட்சியை கொடுத்தார்கள்?. நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் உங்களுக்கு இந்த ஆட்சியை தந்தார்கள். ஆனால், மக்களை பற்றி சிந்திக்கவில்லை. மக்களுக்கு என்ன திட்டம் தேவை என்பதையும் சிந்திக்கவில்லை.

இன்றைய தினம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தவுடன் இவ்வளவு பதற்றம் எதற்காக?. மடியிலே கனம் இருக்கிறது, வழியிலே பயம் இருக்கிறது.

ஊழலில்தான் வளர்ச்சி இருக்கிறது

2 லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்று இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி என்று அறைகூவல் விட்டுக் கொண்டிருக்கின்ற முதல்-அமைச்சர் இந்த 2 ஆண்டு காலத்தில் எந்த துறையையும் கவனிக்கவில்லை.

எல்லா துறையிலும் வளர்ச்சி என்று சொல்கிறார். வளர்ச்சி எதிலே இருக்கிறது என்று சொன்னால் ஊழலில்தான் வளர்ச்சியாக இருக்கிறது.

கோர்ட்டில் நிரபராதி என்று நிரூபியுங்கள்

எனக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை, அதுதான் அ.தி.மு.க. முதல்-அமைச்சருக்கு உண்மையிலேயே தில், திராணி இருந்தால் இந்த வழக்கை சந்திக்க வேண்டும். துணிச்சலுடன் சந்திக்க வேண்டும்.

நாங்கள் சந்திக்கிறோம் அல்லவா?. அதைப்போல செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கை நேர்மையான முறையில் சந்தித்து வாதாடி கோர்ட்டில் நாங்கள் நிரபராதி என்று வெளியே வாருங்கள்.

அதைவிட்டு விட்டு ஏதேதோ பேசி மக்களை குழப்பி செந்தில் பாலாஜி ஒரு நல்லவர் என்ற தோற்றத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்க பார்க்கிறார். இதே செந்தில் பாலாஜி பற்றி மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, கரூர் பொதுக்கூட்டத்தில் குற்றம் சுமத்தி பேசினார். அப்படி இருக்கும்போது இன்றைக்கு செந்தில் பாலாஜி எப்படி நல்லவர் ஆனார்.

கூட்டணி கட்சிகள்

ஆனால், நாங்கள் அப்படியில்லை. கோர்ட்டில் நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று வாதாடினோம். அந்த வழக்கை சந்தித்த கட்சி எங்கள் கட்சி. அ.தி.மு.க.வை இனி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீண்டிப் பார்க்க கூடாது. இந்த ஊழலுக்கு அவருடைய கூட்டணி கட்சிகள் துணை போக வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

இன்று கூட்டணியில் இருப்பீர்கள். நாளைக்கு வெளியில் வந்துவிடுவீர்கள். மக்களுக்கு எப்படி பதில் சொல்வீர்கள். அ.தி.மு.க., பா.ஜ.க.வின் அடிமை என்று சொல்கிறார். அதே பா.ஜ.க.வுடன் 1999-ம் ஆண்டு கூட்டணி போட்டு, பா.ஜ.க. அமைச்சரவையில் தி.மு.க. எம்.பி.க்கள் மந்திரிகளாக இடம் பெற்றார்கள். எனவே, காலத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள்.

அடிமை இல்லை

அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் யாரும், எந்த கட்சிக்கும் அடிமையானவர்கள் அல்ல. சொந்த காலில் நிற்கின்றவர்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக, உரிமைக்காக பாடுபடுகின்றவர்கள். எங்களுக்கு பதவி முக்கியம் அல்ல. நாட்டு மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதுதான் அ.தி.மு.க.வின் லட்சியம். அது மட்டுமல்ல.

சோதனை நடத்த வந்த அமலாக்கத்துறையினர் பலர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள். அப்போதெல்லாம் முதல்-அமைச்சர் வாய் திறக்கவே இல்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இதுவே சான்று.

ஒன்றும் செய்ய முடியாது

எனவே, அ.தி.மு.க.வை எந்த காலத்திலும் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு தொண்டனைக் கூட நீங்கள் தொட்டுப் பார்க்க முடியாது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய இந்த இயக்கத்தை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் அழிந்து போவார்கள். காற்றோடு காற்றாக கரைந்து போவார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


Next Story