அ.தி.மு.க. வங்கி கணக்கு முடங்கும் அபாயம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாறிமாறி கடிதம் கொடுத்ததால் அதிகாரிகள் திணறல்


அ.தி.மு.க. வங்கி கணக்கு முடங்கும் அபாயம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாறிமாறி கடிதம் கொடுத்ததால் அதிகாரிகள் திணறல்
x

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மாறிமாறி கடிதம் கொடுத்துள்ளதால் அ.தி.மு.க. வங்கி கணக்கு முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

ஒற்றை தலைமை விவகாரம் அ.தி.மு.க.வில் பூகம்பத்தை கிளப்பிய நிலையில், சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று முன்தினம் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டார். 'என்னை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. நான் எடப்பாடி பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்குகிறேன்' என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ஒருவருக்கொருவர் மாறி, மாறி கட்சியில் இருந்து நீக்கிக்கொண்டனர். இதற்கிடையே சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்தார். அப்போது அவருடைய ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. நாற்காலி உள்பட ஒருவருக்கொருவர் கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தாக்கிக் கொண்டனர். மேலும் இரு தரப்பினரும் கற்களையும் வீசினார்கள்.

எடப்பாடி பழனிசாமி கடிதம்

இரு தரப்பினரின் மோதல் போக்கு காரணமாக அ.தி.மு.க. அலுவலகம் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தலைமை அலுவலக வரவு-செலவு கணக்குகள் அனைத்தும் மயிலாப்பூரில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி கிளையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பொதுக்குழுவில் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திண்டுக்கல் சீனிவாசன்தான் அ.தி.மு.க.வின் புதிய பொருளாளர் என்று எடப்பாடி பழனிசாமி, அ.தி. மு.க.வின் வங்கி கணக்குகள் பராமரிக்கப்படும் வங்கி கிளையின் மேலாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்து இருந்தார்.

ஓ.பன்னீர்செல்வமும் கடிதம்

இந்தநிலையில், அதே வங்கி கிளையின் மேலாளருக்கு, ஓ.பன்னீர்செல்வமும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அ.தி.மு.க.வின் பொருளாளராக கடந்த சில ஆண்டுகளாகவும், 2017-ம் ஆண்டு முதல் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் நான் இருக்கிறேன். அ.தி. மு.க.வின் பொருளாளர் என்ற முறையில் கட்சியின் வங்கி கணக்கு, கட்சியின் தலைமை நிலைய கட்டிட நிதி கணக்கு, அ.தி.மு.க. கட்சி வளர்ச்சி நிதி கணக்கு மற்றும் பல்வேறு நிலை வைப்புத்தொகை வரவு செலவு கணக்குகளை நான் கையாண்டு வருகிறேன்.

கடந்த 11-ந்தேதி சட்டவிரோதமாக நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், எனக்கு பதிலாக, திண்டுக்கல் சீனிவாசனை புதிய பொருளாளராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீங்கள்தான் முழுபொறுப்பு

தேர்தல் ஆணையத்திடம் உள்ள தகவலின்படி நான்தான் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் இருக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டிலும், சென்னை ஐகோர்ட்டிலும் விசாரணையில் உள்ளது. எனவே அ.தி.மு.க.வின் வரவு-செலவு கணக்குகளை திண்டுக்கல் சீனிவாசனையோ அல்லது அவரால் நியமிக்கப்படும் வேறு ஒருவரையோ கையாள்வதற்கு அனுமதிக்கக்கூடாது.

என்னை தவிர வேறு யாரையும் அ.தி.மு.க.வின் வரவு-செலவு கணக்குகளை கையாள அனுமதித்தால், வங்கி கணக்கில் முறைகேடு நடந்தாலோ அல்லது தவறாக பயன்படுத்தப்பட்டாலோ அதற்கு நீங்கள்தான் முழு பொறுப்பு ஆவீர்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இருதரப்பினரும் போட்டிபோட்டு கடிதம் கொடு்த்திருப்பதால் வங்கி அதிகாரிகள் திணறி வருகிறார்கள். எனவே வங்கி கணக்கு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Next Story