சென்னையில் அ.தி.மு.க தேர்தல் குழுக்கள் இன்று முதல் கட்ட ஆலோசனை


சென்னையில் அ.தி.மு.க தேர்தல் குழுக்கள் இன்று முதல் கட்ட ஆலோசனை
x

அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் குழுக்களின் முதல்கட்ட ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில விறுவிறுப்பை காண்பித்து வருகின்றன. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணியை தொடங்கி உள்ளன.

அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அ.தி.மு.க. சார்பில் தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசார குழு, தேர்தல் விளம்பர குழு ஆகியவற்றை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 22-ந்தேதி அறிவித்தார்.

இதில், தொகுதி பங்கீட்டு குழுவில், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பென்ஜமின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், பொன்னையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்பட 10 பேர் இடம் உள்ளனர். தேர்தல் பிரச்சாரக்குழு, விளம்பரக்குழுவிலும் முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஆலோசனை

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த 4 குழுக்களின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில், வருகிற நாடாளு மன்ற தேர்தல் கூட்டணி தொடர் பாகவும், தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும், வேட்பாளர்கள் தேர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுப்பது குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story