அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை: சேலம் கோர்ட்டில் 2 பேர் சரண்
சென்னை செங்குன்றம் அருகே அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி தலைவர் கொலையில் சேலம் கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனர்.
முன்னாள் ஊராட்சி தலைவர்
சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி மொண்டியம்மன்நகர் திலக்நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 53). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், பாடியநல்லூர் ஊராட்சி முன்னாள் தலைவர் ஆவார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளராக இருந்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் காலை பாடியநல்லூர் பகுதியில் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் அருகில் உள்ள திடலில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்தது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முயன்றார். அந்த கும்பல் ஓட, ஓட விரட்டி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி பார்த்திபனை படுகொலை செய்தது.
சரண்
இது குறித்து செங்குன்றம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக சென்னையை அடுத்த வியாசர்பாடியை சேர்ந்த வேலாயுதம் மகன் முருகேசன் (33), அரக்கோணத்தை சேர்ந்த மணி என்பவருடைய மகன் சங்கர் (32) ஆகிய 2 பேர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.