நிலக்கரி எடுப்பு ரத்து செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க. தான் முக்கிய காரணம்


டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பு ரத்து செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க. தான் முக்கிய காரணம் என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர், ஏப்.9-

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பு ரத்து செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க. தான் முக்கிய காரணம் என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார்.

தண்ணீர் பந்தல் திறப்பு

கோடை காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தல் திறக்க அ.தி.மு.க.வினருக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நீர் மோர்பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே தஞ்சை தெற்கு மாவட்டம், மருத்துவக்கல்லூரி பகுதி, 51-வது வார்டு அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்புவிழா நேற்று நடந்தது.

விழாவுக்கு மருத்துவக்கல்லூரி பகுதி முன்னாள் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் காந்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தராசு, இளமதி சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 51-வது வார்டு செயலாளர் மனோகர் வரவேற்றார்.

காமராஜ் திறந்து வைத்தார்

நீர் மோர் பந்தலை அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பொது மக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், தண்ணீர் ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், விளார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தம்பி என்ற சோமரத்தினசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற பொருளாளர் தம்பிதுரை, ஒன்றிய செயலாளர்கள் சாமிவேல், நாகத்தி கலியமூர்த்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை முன்னாள் துணைத்தலைவர் ரெங்கப்பா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.

முடக்க முடியாது

பின்னர் முன்னாள் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இயக்கம் என்பதை தொண்டர்களும், நிர்வாகிகளும் முடிவு செய்து விட்டனர். கிட்டத்தட்ட நீதிமன்றமும் அதைத்தான் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் திருச்சியில் வருகிற 24-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் மாநாடு நடத்த உள்ளதாக வரும் தகவலை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே எந்த சம்பந்தமும் கிடையாது. இரட்டை இலையை யாராலும் முடக்க முடியாது. கவர்னர் தெரிவித்த கருத்து குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

அ.தி.மு.க-பா.ஜ.க, இடையே கூட்டணி தொடரும், நல்ல முறையில் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அது தான் எனது கருத்தும். டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட கோரி, எதிர்ப்பு வலுத்தது. இதில், அ.தி.மு.க.வின் குரல் ஓங்கி ஒலித்தது.

சட்டசபையில், அ.தி.மு.க., சார்பில், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினேன். அ.தி.மு.க. வின் அழுத்தமான கோரிக்கையை தொடர்ந்து காவிரி டெல்டா மாவட்டங்களில 3 இடங்களில் நிலக்கரி சுரங்கம் எடுக்கப்படாது என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அ.தி.மு.க.வின் செயல்பாடு தான்.

அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி

அ.தி.மு.க. ஆட்சியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, காவிரி டெல்டா மாவட்ட உரிமையை பாதுகாத்தார். ஹைட்ரோ கார்பன் திட்டம் டெல்டா மாவட்டங்களில் வந்தபோது, அப்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். அதை அடிப்படையாக கொண்டு தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story