தி.மு.க.வினருக்கு அ.தி.மு.க. ஆதரவு
தி.மு.க.வினருக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள அரியலூர் நகராட்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க.வைச் சேர்ந்தவரும், நகர் மன்ற தலைவருமான சாந்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கலியமூர்த்தி, ஆணையர் தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் ஜேசுமேரி, செல்வராணி, ராணி, ராஜேஷ் ஆகியோர் பங்கேற்கவில்லை.இருப்பினும் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது என்பன உள்ளிட்ட 47 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. ஆனால் இந்த தீர்மானங்களுக்கு மேற்கண்ட உறுப்பினர்கள் ஆதரவு கட்டாயம் தேவை என்ற நிலையில், அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரியலூர் நகராட்சியை பொருத்தவரை அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர்களின் செயல் தி.மு.க. கவுன்சிலர்களே கூட்டத்திற்கு வராத போதும் நாங்கள் இருக்கிறோம் நீங்கள் கவலைப்படாதீர்கள் என்பது போல் இருந்ததாக தெரிகிறது. தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொள்ளாதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. கூட்டத்துக்கு வராத கவுன்சிலர் வார்டுகளில் பணிகள் நடைபெறவில்லையா? அல்லது அவர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகிறதா? என்பது தெரியவில்லை. கூட்டம் ஆரம்பித்து 10 நிமிடங்களில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.