ஆரணி நகரமன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு


ஆரணி நகரமன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
x

ஆரணி நகரமன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி நகரமன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆரணி நகரமன்ற கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் தலைவர் ஏ.சி.மணி தலைமையில் நகரமன்ற கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் பாரி பி.பாபு முன்னிலை வகித்தார். ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி வரவேற்றார்.

கூட்டத்திற்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர் பவானி கிருஷ்ணகுமார், புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவைகலப்பு செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என பதாகையுடன் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய நீதி கட்சி உறுப்பினர் ஏ.சி.பாபு, நகரமன்ற தலைவரிடம் மாவட்ட அமைச்சரிடம் தெரிவித்து ஆரணி பகுதியில் ரிங் ரோடு அமைத்து கொடுத்தால் நகரில் போக்குவரத்து குறையும். அதற்கு அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து செல்லுங்கள் நாங்களும் அமைச்சரிடம் பேசுகிறோம் என்று கூறினார். அப்போது தி.மு.க. உறுப்பினர் அரவிந்த் எங்கள் அமைச்சர் சிறப்பாக செய்வார் என்றார். அப்போது ஏ.சி.பாபு நான் தலைவரிடம் பேசும் போது உறுப்பினர் தலைவரிடம் கேள்வி கேட்க வேண்டும் என்னிடம் நேரடியாக வரக்கூடாது என்றார். இதனால் சிறிது நேரம் உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

எம்.பி. வருகை

அப்போது பார்வையாளராக திடீரென டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி. வந்து, நகரமன்ற தலைவரை சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார். பதிலுக்கு தலைவரும் சால்வை அணிவித்து, கோரிக்கை மனு வழங்கினார். பின்னர் விஷ்ணுபிரசாத் எம்.பி. சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர் எ.ஜி.மோகன், ஆரணி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரனுக்கு நகரமன்றத்தில் இருந்து மன்ற கூட்டம் நடக்கும் போது அஜெண்டா அனுப்புவது முறை. ஏன் இதுவரை அனுப்பவில்லை. இனியாவது அனுப்புங்கள் என்று பேசினார். அதற்கு தலைவர் இதுவரை யாரும் சொல்லவில்லை. இனி அஜெண்டா அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

அ.தி.மு.க. வெளிநடப்பு

நகரமன்ற தலைவர் திடீரென தான் கொண்டு வரும் தீர்மானம் எனக்கூறி ஆரணி நகராட்சி எதிரே கடந்த 13-12-2022 அன்று அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆரணி நகரமன்ற துணைத்தலைவர் பாரி பி.பாபு, அமைச்சர் எ.வ.வேலு குறித்து ஒருமையில் பேசியதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஆரணி நகர பொதுமக்கள் மற்றும் காய்கறி வியாபாரிகளின் நலனுக்காக வழங்கிய வாக்குறுதிக்கிணங்க ஆரணி காந்தி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் 144 கடைகளின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து தீர்மானம் கொண்டு வருகிறேன் என பேசினார்.

அதற்கு துணைத்தலைவர் பாரி பி.பாபு மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் தலைவரின் இருக்கைக்கு முன்பு சென்று கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சிறிது நேரத்திலேயே கூட்டம் முடிக்கப்பட்டது.


Next Story